கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது. வருடம் முழுவதும் அலுவகம், வேலை, படிப்பு என வாழ்க்கையை கட்டத்துக்குள் வைத்துக் கொள்பவர்கள் குடும்பத்தோடு, நண்பர்களோடு குதூகலமாக நேரத்தை செலவு செய்ய சுற்றுலா செல்ல விரும்பும் காலம் இது.
பல இனிய நினைவுகளையும், சந்தோஷங்களையும் ஒருசேரத் தருவது இந்தச் சுற்றுலாப் பொழுதுகள்தான்.
வருடம் முழுவதும் நமக்குள் உற்சாகத்தை திகட்டத் திகட்ட தரப்போவது இந்த சுற்றுலாப் பயணங்கள்தான்.
ஏப்ரல் மாதம் நுவரெலியாவில் வசந்த காலம் களைகட்டிவிடுதால் சுற்றுலா செல்ல விரும்பும் அநேகமானோரின் ஏக தெரிவு மலை நாடு தான்.
நுவரெலியாவில் வசந்தகால நிகழ்ச்சிகள், சிவனொளி பாதமலை, உலக முடிவு, கோவில்கள், பூங்கா என்று பார்த்ததையை பார்க்காமல் கொஞ்சம் வித்தியாசமாக இளவேனிக்காலத்தை அழகாக இயற்கையுடன் களிக்க விரும்பினால் நீங்கள் செல்லவேண்டிய இடம் சென்டெலியாஸ் கபானா.
கொழும்பில் இருந்து ஹட்டன் செல்லும் வழியில் ஹட்டன் நகரை அண்மிப்பதற்கு முன்பு இருக்கும் சிறியக்கிராமம் தான் செனன். செனன் சந்தியில் இருந்து ஆகரோயா நோக்கி செல்லும் போது சென்டேலியாசில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடம் தான் சென்டெலியாஸ் கபானா. கபானாவை சென்றடையும் பாதையே எங்களை அந்த இடம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும்.
பாதை ஒன்றும் தாரிடப்பட்ட ஹைவே இல்லை. காட்டுகளுக்கு நடுவே பயணிக்கும் த்திரில்லை கொடுக்க கூடியது. குன்றும் குழியுமான பாதை, பச்சை பசேலேனே எங்கு பார்த்தாலும் புற்களும் தேயிலையுமாக மலையகத்திற்கே உரிய இயற்கை எழில் கொட்டிக்கிடக்கிறது.
நகர நெரிசலில் வாழ்ந்தவர்களுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கமாக இருக்கும் இரண்டு மலைத்தொடர்களின் நடுவே சரிவுப்பகுதியில் பலகையால் அமைக்கப்பட்ட குட்டிக்குட்டி குடில்கள். புல்லில் வேய்ந்த கூரைகள் இயற்கையாக அமைந்த நீரோடை என்று இந்த இடம் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது.
எந்த வித தொந்தரவும் இன்றி வேலை டென்ஷேன்களை மறந்து கிராமத்துப் புற வாழ்க்கையை வாழ்ந்துப்பார்க்க விரும்புவோருக்கு அந்த இடம் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.
இங்கு உள்ள தளபாடங்கள் முதல் சுவர்கள் வரை அனைத்தும் மரத்தால் ஆனவை. மின்சாரம் கூட அருவி நீரின் ஓட்டத்திலிருந்துதான் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
உணவருந்துவதற்கான இடம், மலசல கூடம், நீர் தடாகம் என அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கற்பாறைகளுக்குள் அறைகள் அமைக்கப்பட்டு கற்கள் என்று தெரியாத அளவுக்கு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி இங்குள்ள ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.
மலையகம் என்றால் பூக்களுக்கு சொல்லாவா வேண்டும். கபானாவிலும் அப்படித்தான் எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண நிறங்களிலான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
சமையல் செய்து கொடுப்பதற்கான ஆளனி இங்கு இருப்பதுடன் ஒவ்வொரு அறைகளும் ஒவ்வொரு விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் ஒரு அறையில் 6 போருக்கு மேற்பட்டவர்கள் தங்க கூடிய வசதி உள்ளது.
இங்கு செல்பவர்கள் சொர்க்கத்தில் தங்கிய உணர்வோடு நிச்சயம் திரும்பிச் செல்லாம் என்கிறார்கள் அங்கு சென்று அனுபவித்தவர்கள்.
Comments
Post a Comment