மாமாங்கேச்சரம்
தென்னை, ஆல், அரசு, வேம்பு, குருந்து, கொக்கட்டிமரம் சந்தன சேற்றுக்குளம் முதலான பசுமையின் நடுவே அமைதியான சூழலில் நெய்தல் நிலப்பரப்பில் நிமிர்ந்து நிற்கிறார் எம்பெருமான் மாமாங்கேஸ்வரர். இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இராமாயணத்திலும் இவ்வாலயம் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோவில் இன, மத வேறுபாடு இன்றி அனைவராலும் தரிசிக்கப்படுகின்றது. மாமாங்க பிள்ளையாராகவும் ஈஸ்வரராகவும் லிங்க வடிவில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்கள். இவ்வாலயத்தில் தற்போது ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தோற்சவமும் அதற்கு முந்திய எட்டு நாட்கள் திருவிழாவும் நடைபெற்று வருகின்றது.
சிவபூசை செய்வதற்கு இவ்விடத்தில் தரித்த இராமர் சிவலிங்கம் ஒன்றை எடுத்துவரும்படி அனுமனை அனுப்பியதாகவும் அனுமன் வரத் தாமதிக்கவே மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டதாகவும்இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் அனுமனால் உருவாக்கப்பட்டது என்றும் இராமாயணம் குறிப்பிடுகிறது. இவ்வாலயம் மட்டக்களப்பு மண்ணின் முக்கியம் வாய்ந்த இடமாக திகழ்கின்றது.
முகத்துவாரம் வெளிச்ச வீடு
1913ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வெளிச்ச வீட்டு 28 அடி உயரமுடையது இன்று வரை எவ்வித சேதமும் இன்றி அழகாக காட்சிதருகிறது. வரும் உல்லாச பயணிகள் இதன் உச்சிக்கு சென்று பார்க்கும் வசதியும் உள்ளது. இந்த வெளிச்ச வீடு. வெளிச்ச வீட்டு சூழலில் மட்டக்களப்பு வாவி அமைந்துள்ளதால் படகுச் சவாரி, சிறுவர்களுக்கான பூங்கா, இளைப்பாற வண்ணமயான குடில்கள் என எந்த நேரமும் களை கட்டியபடி உள்ள ஒரு இடம் தான் மட்டக்களப்பு முகத்துவாரம்.
ஆற்றங்கரையுடன் அண்மித்து உள்ள தீவுகளுக்கு ஆற்றில் நீர் குறைவாக உள்ள காலங்களில் நடந்தே செல்லலாம். அல்லது படகில் சென்று தீவை பார்வையிட்டுத் திரும்பலாம். அதுமட்டுமின்றி கடலும் களப்பும் இணைகின்ற முகத்துவாரம் அமைந்துள்ளதால் வாவி வழியாக கடலையும் அண்மித்து படகில் சென்று பார்வையிடலாம். உல்லாச பயணிகளை கவரும் வண்ணம் தீவினுள் மிருகங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் காட்டுக்கு சென்று மிருகங்களை பார்வையிடுவது போன்ற அனுபவம் ஏற்படும்.
கல்லடிப்பாலம்
பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட இப் பாலம் மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இது இலங்கையின் நீளமான பாலமாகவும் விளங்குகிறது. மட்டக்களப்பிற்கு ஓர் சின்னம்போல் காணப்படும் இப்பாலம் சத்தம் இல்லாத இரவு நேர பௌர்ணமி தினங்களில் மீன் பாடும் இன்னிசை கேட்பதாக பிரதேசவாசிகளிடம் ஒரு நம்பிக்கை காணப்படுகின்றது.தற்போது புதிதான பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்துவதுடன் பழைய பாலம் எதுவித மாற்றமும் செய்யாமல் காணப்படுகிறது.
பாசிக்குடா
மட்டக்களப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். அலைகளின் ஆரவாரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும் இறைவனின் படைப்பில் என்ன ஒரு அற்புதம் என்று செல்லும் அளவுக்கு அழகாய் அமைந்துள்ளது.
இலங்கையில் ஏனைய கடற்கரைகளோடு ஒப்பிடும் போது உப்புத்தன்மை குறைவான ஒரே கடற்கரை இதுவாகத்தான் இருக்கும். அது மட்டும் அல்லாமல் பாதுகாப்பான கடற்கரையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இன்று அநேகமான சுற்றுல பயணிகள் தங்கும் அளவுக்கு விடுதிகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment