இயற்கையின் பரிசு ஹோட்டன் சமவெளி



இயற்கையின் கொடையை எண்ணிக்கையளவிலோ ஏட்டளவிலோ அளவிட்டுவிட முடியாது. அத்தனை பிரமாண்டத்தையும் ரம்யத்தையும் நமக்கு இயற்கை பரிசளித்திருக்கின்றது. மத்திய மலைநாட்டின் பெரும் பகுதிகள் இதற்கு சான்று பகர்கின்றன. பசுமை மாறா காடுகளும், பச்சைப் பசேல் புல் நிலங்களும், நீர்வீழ்ச்சிகளும், பூந்தோட்டங்களும் பார்ப்போரை சொர்க்கலோகம் கொண்டு செல்கிறது. இந்த ரம்யத்தில் திளைக்காதவர்கள் இருக்க முடியாது.
இலங்கையின் பெரும் பகுதிகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் தனித்தனியே பூங்கா, மிருகக்காட்சி சாலை, நீர்வீழ்ச்சி என பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இவை அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிப்பதென்றால் எப்படி இருக்கும்?



அப்படியொரு சொர்க்க பூமிதான் ஹோட்டன் சமவெளி. பார்த்துப் பார்த்து புனரமைக்கப்பட்டு வரும் சுற்றுலாத் தலங்களுக்கு மத்தியில் இயற்கையின் அன்பளிப்பில் பல அற்புதங்களை கொண்டமைந்தது இந்த ஹோட்டன் சமவெளி. இதுவரையில் சங்கர் படங்களை பார்த்து மட்டுமே பிரம்மித்து வாய்பிளக்கும் நமக்கு ஹோட்டன் சமவெளி செல்லும் சந்தர்ப்பம் அமைந்தால்... நாங்களும் சொல்வோமே இது அதுக்கும் மேல...!
மத்திய மலைநாட்டில் தியகம, பட்டிபொல, தொட்டு பொலகந்த, ஒஹிய்யா, ஹினி ஹிரிய, கரிவத்த, கிரிகலபொத்த போன்ற பகுதிகளை எல்லைகளாகக்கொண்ட இச்சமவெளி 3160 ஹெக்டேயர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1988 இல் தேசிய பூங்காவாக மட்டுமே காணப்பட்ட இச்சமவெளி 2010 ஆம் ஆண்டு உலக மரபுரிமைத் தலமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியிருப்புகள் காணப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இப்பகுதி முன்னர் மகாஎலிய என அழைக்கப்பட்டுள்ளதுடன் இங்குள்ள தொடுபலை மலை, இராவணன் சீதையை கடத்தி இலங்கைக்கு கொண்டுவந்தபோது  தனது விமானத்தை தரையிறக்கிய இடம் எனவும் நம்பப்படுகின்றது.
வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் இவ் வனப்பூங்கா  1800ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய பிரித்தானிய ஆளுநர் சேர்.றொபர்ட் ஹோர்ட்டன் இப்பகுதிக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இப்பகுதி ஹோட்டன் சமவெளி என அழைக்கப்படுகிறது.
இங்கு 57 இற்கும் மேற்பட்ட அரிய வகை தாவரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவற்றில் 29 வகைத் தாவரங்கள் இலங்கைக்கே உரித்தானதாகும். மேலும் மேட்டு நிலத்திற்குரித்தானதாக சிறுத்தை, சாம்பர் மான் போன்ற அழிந்துவரும் அரியவகை உயிரினங்களையும் இங்கு காணமுடியும். இச் சமவெளி பறவைகளின் சொர்க்க புரியாகும். இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 23 இனப் பறவைகளில் 14 இனப்பறவைகளை இங்கு பார்வையிடலாம். அத்துடன் நீர் வீழ்ச்சிகள், சிற்றாறுகள், தடாகங்கள் போன்றவையும் இங்கே இயற்கையிலேயே அமைந்துள்ளன.
மேலும் இலங்கையின் மிகச் சிறிய மூங்கில்களையும் இங்கு காணலாம். இது நீரோடைகளை அண்டிய தாழ் சதுப்பு நிலங்களிலேயே வளரும் தன்மை கொண்டவை. இதன் இளம் இலைகள் மான், மறைகளின் உணவாகும். இங்குள்ள நீரோடையில் வானவில், ட்ரெரட் மீன்களைக் காணலாம். பிரித்தானியரால் பொழுது போக்கிற்காக மீன் பிடிப்பதற்காக இம்மீன்கள் அக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்பகுதிக்கே உரிய சிறப்புகளில் முக்கியமான ஒன்று உடனுக்குடன் மாற்றமடையும் காலநிலை. உலக முடிவினை நோக்கி நடந்து செல்லுகையில் அடர்ந்த பனியினையும் முகில்களையும் அருகில் காண முடியும். முகில்கள் சட்டென கீழிறங்கி உங்களை வருடிச் செல்வது இங்கு மட்டுமே கிடைக்கக் கூடிய அற்புதமான அனுபவமாகும்.

பேர்கஸ் நீர்வீழ்ச்சி
ஹோட்டன் சமவெளிக்கு வரும் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் ஒரு நீர்வீழ்ச்சி பேர்கஸ் நீர்வீழ்ச்சி. இந்நீர்வீழ்ச்சியின் பிறப்பிடம் வளவை ஆற்றின் தலையாறான பெலிவுல் ஆறாகும். பிரித்தானியர் ஆட்சியின் போது இப்பகுதியில் யானைகளை வேட்டையாடிய சேர்.சமுயெல் பேர்கஸ் என்பவரின் நினைவாக இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கிரிகல் பொத்தை மலை
இச் சமவெளிக்கு மேற்கு எல்லையில் அமைந்துள்ளது கிரிகல் பொத்தை மலை. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 2,313 மீற்றர் உயரமானதாக இருந்தாலும் ஹோட்டன் சமவெளியின் உயரத்தை விட சிறியதாகவே காணப்படுகின்றது.
உலக முடிவு
ஹோட்டன் சமவெளியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள உலக முடிவு. மிக உயரமாக காணப்படும் இப்பகுதி பார்ப்பவரை தலைசுற்ற வைக்கிறது. இதுதான் உலக முடிவு என பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்படுகின்றது. இதனை நிரூபிக்கவோ, பொய்ப்பிக்கவோ எம்மவர்கள் முயற்சி செய்வதாகத் தெரியவில்லை.
பார் இன்
பார் இன் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. ஹோட்டன் சமவெளியின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள நோர்த்-கோவ் தேயிலைப் பெருந்தோட்டத்தின் முன்னாள் அதிகாரி தோமஸ் பார் என்பவரால் 1901ஆம் ஆண்டு வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்கும் தனிப்பட்ட விடுதியாக அமைக்கப்பட்டது தான் இந்த பார்இன். 1919 ஆம் ஆண்டு பார் இங்கிலாந்தில் மரணமான போது இவரது சாம்பல் ஹோட்டன் சமவெளிக்கு கொண்டுவரப்பட்டு தூவப்பட்டதாக சொல்லப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் இது ஒரு நூதனசாலையாக மாற்றப்பட்டுள்ளது.

Comments