பேராதனை தாவரவியல் பூங்கா


தாவரமொன்றை இனம் காணத் தேவையான பாகங்களும் 
அத் தாவரம் பற்றிய அடையாளங்களும் ஒன்றாக ஆவணப்படுத்தப்பட்டு கோப்புத் தாவரத் தொகுப்புக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை தாவரங்களின் பிறப்புச் சான்றிதழ்களாக கூடக் கருத முடியும்பூங்கா என்றதும் பலரின் மனதில் தோன்றுவது இருக்கைகளும், மரத்தடியின் கீழ் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளும், சிறுவர் விளையாட்டுக்களும் தான்.



ஆனால், இந்த நினைவுகளுக்கெல்லாம் அப்பால் நம் நாட்டின் இயற்கை வளத்தைப் பேணுவதிலும் ஏனைய பொழுதுபோக்கு மற்றும்
சுற்றுலாத்தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் பேராதனை தாவரவியல் பூங்கா ஆற்றும் சேவை அளப்பரியது.
மலைநாட்டிற்கே மகுடம் சூட்டும் வகையில் இயற்கைக் கொடைகளை தன்னகத்தே கொண்டு அமைந்த பேராதனைப் பூங்கா நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து இன்றும் சுற்றுலாப் பயணிகளை வியக்கும் வண்ணம் உள்ளது. இவ்வருடம் பேராதனைப் பூங்காவை பார்த்தவர்கள் அடுத்தவருடம் சென்று அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று சலித்துப்போகாத வண்ணம் ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வித்தியாசத்தை செய்து சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றனர்.



இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்காவாக உள்ளதுடன் கண்டியிலிருந்து மேற்குத் திசை நோக்கிச் செல்லும் போது 5.5 கிலோ மீற்றர் தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 147 ஏக்கர்கள் ஆகும். இப் பூங்கா விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காக்களுக்கான பிரிவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
14ஆம் நூற்றாண்டிலிருந்தே இப் பூங்காவின் வரலாறு தொடங்குகிறது. மூன்றாம் விக்கிரமபாகு கி.பி. 1371 இல் தனது அரச மாளிகையை பேராதனையில் மகாவலி கங்கைக் கரையிலே அமைந்ததாகக் கூறப்படும் காலம் இப்பூங்காவின் தோற்றத்துக்குரிய காலமாகக் கருதப்படுகிறது. அதன் பின்னர் 1747 - 1780 வரை கண்டியை ஆண்ட இராஜாதிராஜசிங்கனும், இவ்விடத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்ததாக அறியப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் இப்பகுதி அவர்கள் வசமானது.
ஆங்கிலேயரின் றோயல் தாவரவியல் பூங்கா என அழைக்கப்பட்ட இதன் பெயர் பலர் மத்தியில் இன்னும் அழிந்துப் போகவில்லை. பிரித்தானியாவின்  கியூ பூங்காவை ஒத்த வடிவிலானதாக பேராதனைப் பூங்கா ஆங்கிலேயரால் மாற்றியமைக்கப்பட்டது. அதன் பின்னர் வெளிநாடுகளிலிருந்து பெறுமதிமிக்க தாவர இனங்கள் இப்பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டன. பூங்காவின் தரம் மேம்படுத்தப்பட்டு பூங்கா சர்வதேச ரீதியில் புகழ்பெறத் தொடங்கியது.
இத்தகை பிரமாண்டங்களைக் கொண்ட இப் பூங்கா வாயில் வழியே நுழைவுச்சீட்டுப்பெற்று உள்ளே நுழையும் போது பிரித்தானியர் காலத்தை பிரதிபலிக்கும் வகையில் தமக்கேயுரித்தான பிரமாண்ட பாணியில் நுழைவாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பூங்காக்களில் இல்லாத சிறப்பு ஒன்று இப்பூங்காவில் உள்ளது. அது தான் பேராதனைப் பூங்கா வளாகத்தினுள்ளேயே அமைந்திருக்கும் தேசிய தாவரத் தொகுப்புக் கூடம். இந்த சொல் பலருக்கு புதிதாக இருக்கும். அதாவது உலகிலே கண்டுபிடிக்கப்பட்ட பற்பல தாவர இனங்கள், குடும்பங்கள், பிரிவுகள் காணப்படுகின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத அல்லது இனங்காணப்படாத பலவும் காணப்படுகின்றன. எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட ஆய்வுகளுக்காக அவற்றைப் பேணி ஆவணப்படுத்துவது அவசியமல்லவா? அந்த ஆவணப்படுத்துதலின் மையங்களாகச் செயற்படுபவைதான் இந்தத் தாவரத் தொகுப்புக் கூடங்கள். தாவரமொன்றை அடையாளப்படுத்தத் தேவையான பாகங்களும் அத்தாவரம் பற்றிய அடையாளங்களும் ஒன்றாக ஆவணப்படுத்தப்பட்டு கோப்புகளாக ஒழுங்கொன்றிலே பேணப்பட்டிருக்கும். இந்த ஆவணக் கோப்புகளை இங்கு பெற முடியும் என்பது இலங்கையர் பலர் அறியாத விடயமாகும். இந்த ஆவணங்களை தாவரங்களின் பிறப்புச் சான்றிதழ்களாக கூடக் கருத முடியும். சில ஆவணங்கள் ஏறத்தாழ 160 - 170 ஆண்டுகள் பழைமையானவை.
பேராதனைப் பூங்கா வெறுமனே தாவரத் தொகுப்புக் கூடத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. பல திணைக்களத்தின் கல்வி நிலையம் காணப்படுகிறது. பெருமளவு கற்கை நெறிகள் நடாத்தப்படுகின்றன. இலங்கையின் பெரிய அந்தூரியம், ஓக்கிட் மலர்களுக்கான பண்ணை, இழைய வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் போன்ற பல கட்டமைப்புக்களை இப்பூங்கா கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பூங்காவில் இருக்கும் ஒவ்வொரு மரத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரஷ்யமான வரலாறுக் கதை இருக்கும். ஒவ்வொரு மரமும் அங்கு நாட்டப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கும். அங்கு காணப்படும் மரங்கள் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை மட்டுமல்ல இயற்கையின் விந்தைகளையும் எடுத்துக்காட்டுகின்றன.

Comments