இலங்கையில் பௌத்த மதத்திற்கு அடித்தளமிட்ட மிகிந்தலைக் குன்று


இலங்கை ஒரு பௌத்த நாடு என்று சொல்லப்படுகிறது. இலங்கையில் பௌத்த சமயம் பரவியதற்கும் மிகிந்தலைக் குன்றுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. மிகிந்தலை இன்று வரலாற்று முக்கியம் பெற்ற இடமாகவும் சிறந்த சுற்றுலாத்தளமாகவும் விளங்குகின்றமையை நாம் அறிவோம்.
மௌரியப்பேரரசில் ஆட்சிபீடமேறிய அசோகச்சக்கரவர்த்தியின் மனமாற்றத்திற்கு காரணமான கலிங்கப் போர் பற்றி நாம் அறிவோம்.  எதிரிப் படைகளை போர் முனையில் துவம்சம் செய்த அசோகன் அன்றிரவு போர்க் களத்திற்கு செல்கிறான். ஒரு வயோதிபப் பெண் இளம் போர் வீரரின் சடலத்தை தனது மடியில் வைத்து கண்ணீர்விட்டு அழுதுக் கொண்டிருக்கிறாள்.



அவளிடம் சென்று நடந்தவற்றை வினவியபோது அவள் என் மகனை கொன்றுவிட்டார்கள் என்று கூறிக் கதறித் துடிக்கிறாள்.
நீங்கள் யார்? என்று அவள் கேட்க நான் தான் சாம்ராட் அசோகன் என்று பதிலளிக்கிறார். கோபமடைந்த இந்தப்பெண் நீ சக்கரவர்த்தி அல்ல. அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் மிருகமென்று கத்தி அழுதுக் கொண்டே மயக்கமடைந்தார்.
இத்தனை உயிர்களை பலிகொண்டு கலிங்கப் போரில் நான் அடைந்த வெற்றியினால் எதனை சாதிக்கப்போகிறேன் என்று நிலை தடுமாறி வேதனையில் மூழ்கியிருந்த சமயம் பௌத்த பிக்கு புத்தபெருமானின் நற்போதனைகளின் உண்மைத் தத்துவத்தை உணர வைக்கிறார்.
அன்று முதல் அசோக சக்கரவர்த்தியின் வாழ்க்கைப்பாதை மாறியது. யுத்தம், கொலை போன்ற பாதக செயல்களை விடுத்து அசோக
சக்கரவர்த்தி பௌத்த மதத்தை தழுவி பௌத்த மதத்தை உலகெங்கும் பரப்பும் பணியை ஆரம்பித்ததுடன் தனது பிள்ளைகளையும் அதில் இணைத்துக்கொண்டார். அதன் பணி அசோகரின் வாரிசான அரஹிட் மகிந்த காவி உடையணிந்து பௌத்த தர்மத்தை உலகத்திற்கு பரப்பும் பணிக்காக இலங்கைக்கு வந்து மன்னன் தேவநம்பிய தீசனை சந்தித்த வரலாறுடன் தொடங்குகிறது இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு.

தேவநம்பிய தீச மன்னன் மிகிந்தலைக் குன்றில் மான் ஒன்றை வேட்டையாட விரட்டிச்சென்றபோது மஹிந்த தேரரை அங்கு சந்தித்ததாகவும் அவரது போதனையின் பின் பௌத்த மதத்தில் இணைந்து கொண்ட தேவநம்பியதீசனும் அவனது குடும்பத்தாரும்  இலங்கையில் பௌத்த மதத்தை பரப்பியதாகவும் மகாவம்சம் கூறுகின்றது.
இப்படி மஹிந்த தேரர் வந்திறங்கிய இடம் தான் மிகிந்தலைக்குன்று பௌத்தர்களின் பாரம்பரிய வணக்கஸ்தலமாக மட்டுமின்றி, பௌத்த மதத்தின் தோற்றத்திற்கு அடித்தளமாகவும் இவ்விடம் அமைந்துள்ளது.
அநுராதபுரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் கிழக்கு நோக்கி செல்லும் போது மிகிந்தலைக் குன்றை காணமுடியும்.அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தனிமையான மலைக்குன்றுப் பகுதியாகவும் இது காணப்படுகின்றது. இதில் மிகிந்தலை மலை, எத்வெகர மலை, ஆனைக்குட்டி மலை மற்றும் ராஜகலலென மலை ஆகிய நான்கு மலைகள் தொடராக அமைந்துள்ளன. ஆரம்ப காலத்தில் மிஸ்ஸக்க பவ்வ என்ற பொதுப்பெயரால் தான் இந்த மலைகள் அழைக்கப்பட்டன.

இலங்கையில் உள்ள எச்சக் குன்றுகளுள் இதுவும் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு, இத்தகைய எச்சக் குன்றுகள் உருவாகின்றன. மஹிந்த தேரரின் வருகைக்குப் பின் இந்த எச்சக் குன்றுகள் புண்ணிய இடமாக மாற்றம் பெற்றன. இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், புதை பொருட்கள் என்பன இங்கு காணப்படுகின்றன. இவை அனுராதபுரக் காலப்பகுதிக்கு உரியவையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகிந்தலை ஒரு சரணாலயம் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மிகிந்தலை சரணாலயம்
இப்பிரதேசம் உலர் வலயமாக காணப்படுவதால் உலர் வலயத்திற்கே உரிய விலங்குகள் இங்கு வசிக்கின்றன. இங்கு யானைகள், மான்கள், மரைகள், காட்டுப்பன்றிகள், எலி இனங்கள், மயில்கள், முயல்கள் மற்றும் சிறுத்தைகள் ஆகிய விலங்கினங்கள் இங்கு அதிகமாக வாழ்கின்றன. தேவநம்பியதீச மன்னன் மான் வேட்டைக்காக இக்காட்டுப் பகுதிக்குச் சென்றதாக மகாவம்சம் கூறுவதற்கு இவ்வனம் ஒரு சிறந்த சான்றாகவும் உள்ளது.

கண்டக விகாரை (Kantaka Cetiya)

கி.மு 1 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கட்டப்பட்ட 425 அடி அடிப்படை சுற்றளவு கொண்ட ஒரு வட்ட தூபிதான் கண்டக விகாரை. மிகிந்தலை வளாகத்தில் அமைந்துள்ள இவ்விகாரையில் குள்ளர்கள், விலங்குகள், மனித, தெய்வங்களின் உருவங்கள் மற்றும் மலர்களின் வடிவங்கள் கருங்கற் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதில் இரண்டு கைகளுடனும் தும்பிக்கை வடிவத்தை கொண்ட சிற்பங்களும் இதில் செதுக்கப்பட்டுள்ளதால் இது கணபதியின் உருவமாக இருக்கலாம் என தொல்பொருளியலாளர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

நாக தடாகம் 

மிகிந்தலைக் குன்றுக்கு மேற்கு புறமாக நாக தடாகம் அமைந்துள்ளது. இந்து ஆலயங்களில் தீர்த்தக்கிணறுகளைப்போன்று படிகளில் கீழிறங்கி சென்று நாக தடாகத்தை பார்க்க முடியும். இது  மிகவும் பிரபலமான குளங்களுள் ஒன்றாகும்.
மகாவம்சத்தில் மஹிந்த தேரரின் வருகையைப் பற்றிய தகவல்களுடன் ஒரு குளம் தொடர்பிலும் சொல்லப்பட்டுள்ளது. இது இந்தக் குளமாக இருக்கலாம் என பலராலும் நம்பப்படுகிறது.

Comments