அதிசயம், ஆச்சரியம் நிறைந்த தம்புள்ளை பொற்கோவில்


உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கை வந்து  செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலரும், தவறாமல் வந்து போகும் நகரங்களுள் ஒன்று மாத்தளை தம்புள்ள நகரம். இலங்கையின் பௌத்த கலாசாரம் பேணப்படும் நகரங்களில் முக்கியமானது. இங்கு ஒருமுறை வந்தவர்களை மீண்டும் வரத் தூண்டும் சிறப்புமிக்க இடம்  தங்கக் கோவில். இது பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு அதிசயம்.

மத்திய மாகாணத்தின் தலைநகர்  கண்டியிலிருந்து  வடக்கே 27 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கிறது பொற்கோவில். அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு புத்தர் சிலை ஒன்று சாந்தமாய் அமர்ந்திருக்க டிராகனின்   வாய்க்குள் பயணிக்கும் த்ரில்லுடன் சுமார் 160 மீற்றர் உயரத்தில் சிறு மலை மீது அமைந்துள்ளது பொற்கோவில்.

குகைக்கோவிலாக சிறப்புப்பெற்றுள்ள இந்த பொற்கோவிலைச் சுற்றி 80 இற்கும் மேற்பட்ட குகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 குகைகளில் கௌதம புத்தரின் 153 சிலைகளும், 3 அரசர்களின் சிலைகள், 4 இந்துக் கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் காணப்படுகின்றன. அமர்ந்த, நின்ற, சயன நிலை என புத்தர் சிலைகள் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படுகின்றன.
ஓவியங்கள் என்றதும் மனதுக்கு வருவது சீகிரிய ஓவியங்கள் மட்டும் தான் ஆனால் தம்புள்ளை குகை ஓவியங்கள் நம் நாட்டிற்கே உரித்தான கலை அம்சங்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 2100 மீற்றர் பரப்பளவுக்கு சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதுடன் புத்தரும், அவரின் போதனைகளை கேட்கும் சீடர்களும் ஓவியங்களாக தீட்டியுள்ளனர். 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இவ் ஓவியங்கள் தீட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவ் ஓவியங்கள் அழிவடையாது பாதுகாப்பதற்காக 1938 ஆம் ஆண்டு கதவுகள் செய்யப்பட்டு குகைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 77 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு செய்யப்பட்ட கதவுகளும் அதில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளும் இன்றும் அழிந்து போகாமல் இருப்பதுஅதிசயம்.பௌத்தர்களின் கலைக்கலாசாரத்துடன் ஒன்றிணைந்து முதலாம் நூற்றாண்டில் வலகம்பா மன்னனால் கட்டப்பட்டது இவ் விகாரை. மன்னனின் பாதுகாப்பிற்காக இவ்விகாரை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இங்குள்ள 16 பெரிய புத்தர் சிலைகளும், அமர்ந்த சிலையில் உள்ள 40 புத்தர் சிலைகளும் வலகம்பா மன்னனால் பூஜிக்கப்பட்டவை. இவ்வாறு தோற்றம் பெற்ற இவ்விகாரை 11 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பௌத்தர்களின் முக்கிய வணக்கஸ்தலமாக மாற்றமடைந்தது. 1190 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
நிஸ்ஸங்கமல்லனால் இவ்விகாரை வழிப்படப்பட்டுள்ளதுடன் 70 புத்தர் சிலைகளுக்கு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. அதன் பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் மேலும் 50 புத்தர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அனுராதபுரத்துக்குட்பட்ட இவ்விகாரை இலங்கையின் இறுதி சுயாதீன அரசான கண்டி இராச்சிய 18 மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டு வந்ததுடன், புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தில் இன்னுமோர் சிறப்பு உள்ளது.
புரியா புதிர்....

உண்மையில் இவ்வாலயத்தில் உள்ள தண்ணீர்க் குடம் ஒரு புரியாத புதிர் தான். மண்ணால் ஆன இந்த குடம் ஆலயத்தில் உள்ள ஒரு கற்பாறைக்குள் அமைந்துள்ளது.
பாறையில் இருந்து தண்ணீர்த் துளிகள்  விழும் சத்தம் அமைதியான அந்த இடத்தில் துல்லியமாய் கேட்கும்.
சதா தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தாலும் இதுவரையில் இந்த குடம் நிரம்பி தண்ணீர் கீழே சிந்தியதில்லை. அதே போல் குடத்தில் விழும் தண்ணீர் எங்கே செல்கின்றது என்பதும் யாருக்கும் தெரியாது. முதலாம் நூற்றாண்டில் ஆரம்பித்த இக் கோயிலின் வரலாற்றில் இன்று வரை இது புரியா புதிராவே தான் இருந்து வருகிறது.

Comments