குவேனிக்கு அடைக்கலம் கொடுத்த சிங்கராஜ வனம்


வானளாவ உயர்ந்த மரங்கள், சலசலத்து ஓடும் அருவிகள், சுதந்திரமாக துள்ளித்திரியும் மிருகங்கள், பறவைகள் என இயற்கை இன்னும் களங்கப்படுத்தப்படாமல் கன்னித்தன்மையோடு காட்சியளிக்கும் இடம் சிங்கராஜவனம்.
இலங்கையின் பாதுகாக்கப்பட்ட தேசிய வனங்களில் முக்கியமானது.  சப்ரகமுவ, தென் மாகாணங்களின் எல்லையில் ஆரம்பித்து இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் 1200000 ஏக்கர் பரந்து கிடக்கிறது இக்காடு.



வெறும் காடுதானே இதிலென்ன இருக்கிறது என்று ஒதுக்கி விடமுடியாது. இவ்வனம் தொடர்பில் பல மரபுக்கதைகள் உண்டு. ஆரம்ப காலங்களில் இங்கு
சிங்கங்கள் அதிகம் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது இக்காடு சிங்க அரசின் வனம் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு பின்னர் சிங்கராஜவனமாக மாற்றமடைந்தது. இவ் வனத்தில் மாநெல் கற்குகையில் வரலாற்றுக்கு முற்பட்ட யுகத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதன் வரலாறு இரண்டாம் பெதிஸ்ஸ மன்னன் காலத்தோடு தொடர்புடையது.
இரத்தினபுரியிலிருந்து கலவானை இறக்குவானை பாதையிலுள்ள குடுவ சந்தியிலிருந்து தெற்கில் 06 கிலோ மீற்றர் பயணம் செய்தால் சிங்கராஜ வனத்திற்கு சொந்தமான வன பாதுகாப்பு காரியாலயத்தை அடைய முடியும். இங்கு பிரவேச பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு 02 கிலோ மீற்றர் தூரம் பயணித்தால் சிங்கராஜ வனத்தை அடைய முடியும். வனம் முழுவதும் வானகங்கள் செல்வதற்கான வழி கிடையாது. கால் நடையாகத்தான் செல்ல வேண்டும். வனத்தை பார்வையிடுவதற்கு ஒருவரின் வழிகாட்டலுடன் அல்லது நண்பர்கள், குடும்பத்தினர் ஒன்றாக சென்று பார்வையிடுவது சிறந்தது. செல்லும் பாதை ஓரங்களில் வழி காட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய இலங்கைக்கே உரித்தான 27 இற்கு மேற்பட்ட பறவையினங்கள், 22 இற்கு மேற்பட்ட விலங்குகள், மூன்று மீனினங்களை இங்கு பார்வையிட முடியும். இங்கு வளரும் தாவரங்கள் நான்கு அரிய வகை பாசிகள்,காளான்வகைகள், ஊர்வன என விஞ்ஞான புத்தகத்தில் படங்களாக பார்த்து பழக்கப்பட்ட பல தாவர, விலங்கு வகைகளை இங்கு பார்வையிட முடியும்.
கெண்டி அல்லது நெப்பந்திசு  என்று அழைக்கப்படும் பூச்சுண்ணி
தாவரங்களையும் இங்கு காணமுடியும்.
இவற்றை பார்வையிட்டபடி காட்டு வழியே நடந்து செல்லும் போது விகாரை ஒன்றை பார்வையிட முடியும்.
குகுளு விகாரை

குகுளு விகாரை என்று அழைக்கப்படும் இவ் விகாரையின் பெயர் பலருக்கும் சற்று புதிதாக இருக்கும். கோழியின் தோற்றத்தைப்போல் இவ்விகாரை இருப்பதால் குகுளுவா விகாரை என இன்றும் அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் காணப்படும் பழைமை வாய்ந்த விகாரையாக கருதப்படுகிறது.
கிரிஎல்லே மலையில் அமைந்துள்ள இவ் விகாரையில் சீதாவக்க இராஜ சிங்கன் பௌத்த சாசனத்தை சீரழிவுக்குள்ளாக்கிய போது பலர் இங்கு மறைந்திருந்ததாக கூறப்படுகின்றது. அத்துடன் வலகம்பா மன்னனும் மறைந்திருந்ததாகவும் அதன் பின்னரே விகாரை புனரமைக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றது. அக்காலத்தில் விகாரையை  உடைத்து புதையல்கள் எடுக்கப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது.
இத்தனை சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்ட சிங்கராஜவனத்தை பார்வையிட்டு செல்லும் போது எம்மால் பார்வையிட கூடிய இன்னுமொரு இடம் தான் வெத்தாகலை.
வெத்தாகலை
பேராசிரியர் நந்த தேவ ஜயசேகர வின் கருத்துப்படி விஜயனால் விரட்டப்பட்ட குவேனியும் இரண்டு பிள்ளைகளும் இங்கு வந்து தங்கியதாக கூறப்படுகின்றது. இன்று இப்பகுதி ஆற்றங்கரையை அண்டிய காட்டுப்பகுதியாக மட்டும் தான் உள்ளது. சிங்கராஜவனத்தில் கருவா மரங்கள் அதிகம் உள்ளது என்பதை சான்று பகரும் இடம் பனாபொல.
பனாபொல
சிங்கராஜ வனத்தை எல்லைப்பிரிவாக அமைந்துள்ள பனாபொல பகுதியில் அதிகளவு கருவா மரங்கள் இருந்தமையால் வாசனைத் திரவியங்கள் மீது மோகம் கொண்ட ஒல்லாந்தர் காலத்தில் இவர்கள் இப்பகுதியில் குடியேறியிருந்தனர். சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் இந்த இடத்தை தெரிவு செய்தால் இயற்கை அழகை மாத்திரமல்ல பல வரலாற்று பிரதேசங்களையும் அரிய, தாவர, விலங்கினங்களையும் பார்த்து வர முடியும்.
Bovitiya flower 

தென் பிரதேசங்களில் அதிகம் வளரக் கூடிய இப் பூவினம் Bovitiya என்ற விஞ்ஞானப் பெயர் கொண்டது. இலங்கைக்கு மட்டுமே உரித்தான இந்தப் பூவானது இந்தியாவில் மட்டுமே காணமுடியும். வருடம் முழுவதும் பூத்துக்குலுங்கும் கன்து முன்து பாலாளி என்ற தமிழ்ப் பெயரைக்கொண்டது.
பிங், ஊதா நிறங்களில் பூக்கும் இப் பூவின் ஒரு கிளையில் நான்கு அல்லது ஐந்து பூக்கள் மட்டுமே பூக்கக் கூடியது.
செங்கண் மாரி நோயை குணப்படுத்தும். இத்தாவரத்தின் இலை முதல் வேர் வரை மூலிகை என்பது பலர் அறியா உண்மையாகும்.

Comments

Post a Comment