ஆடி மாதம் உற்சவம் காண்கிறார் கதிர்காமக்கந்தன். இனம் மொழி கடந்து அனைத்து மக்களும் வழிபடும் இடம் மட்டுமல்ல வெளிநாட்டு சுற்றுலாத்துறையினர் நாடிச் செல்லும் இடமாகவும் இருக்கிறது கதிர்காமம்.
ஊவா மாகாணத்தின் புத்தளப் பிரிவிலுள்ள தியனகம என்ற இடத்தில் காடுசூழ் மாணிக்க கங்கை தழுவிச் செல்லும் வனப்புறு திருநகரில் எழுந்தருளியுள்ளார் கதிர்காமக்கந்தன். சூரனின் இராசதானியாக விளங்கிய வீர மகேந்திரபுரி இவ் ஆலயம் இருக்கும் இடத்திற்கு தெற்கு திசையில் இருந்தமையால் அதனை நோக்கியே வாயில் உள்ளதாக நம்பப்படுகிறது. சூரபத்மனை வதஞ்செய்ய புறப்பட்ட முருகப் பெருமானும் அவரின் சேனைகளும் கதிர்காமத்தில்தான் பாசறை அமைத்து வீர மகேந்திரபுரி என்னும் இராசதானியை அரசாண்ட சூர பத்மனை வதஞ் செய்தார் என கந்தபுராணம் கூறுகின்றது.
ஆனால், இவ்வாலயம் இலங்கையை ஆண்ட எல்லாள மன்னனை போர்க்களத்தில் சந்திக்கும் முன் துட்டகைமுனு மன்னன் கதிர்காம கந்தனுக்கு நேர்த்தி வைத்ததாகவும் போரில் வென்ற துட்டகைமுனு மன்னன் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக இவ் ஆலயம் கட்டப்பட்டதாகவும் மகாவம்ச நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்களவர்கள் கூறுகின்றார்கள்.
ஒளிபுகாவகையில் அமைக்கப்பட்டுள்ள கருவறை முருகனை யாரும் பார்த்து வணங்க முடியாது. அலங்கரிக்கப்பட்ட பெரிய திரைச் சீலையினால் கருவறை மூடப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பேசும் கந்தழி வணக்க முறையான வாகட்டி வழிபாடு செயும் முறைமை இன்று வரை கதிர்காமத்தில் இடம் பெறுகின்றது.
கதிர்காமத்தில் கந்தன் கோவில் மட்டுமல்ல இன்னும் பல
சிறப்பான இடங்களும் இருக்கின்றன. இம்முறை அங்கு செல்ல விரும்புபவர்கள் எப்போதும் போல கதிர்காமக்கந்தனை
வழிப்பட்டோம் வந்தோம் என்று இருக்காமல் அங்கு வேறு என்ன ஸ்பெஷல் என்பதையும் பார்த்துவிட்டு வரலாம்.
செல்லக்கதிர்காமம்
கதிர்காமத்தில் இருந்து 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள விநாயகர் திருத்தலமாகும். பக்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடி செல்லக்கதிர்காமத்திலுள்ள விநாயகப் பெருமானை வழிபட்டு பின் ஏழுமலையானைத் தரிசிக்க கதிரமலையேறும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
ஆரம்பத்தில் வள்ளித்தீவு என்று அழைக்கப்பட்ட இவ் இடத்தில் தான் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்று கூறுகின்றனர். இக் காட்டில்தான் முருகனுக்கு உதவியாக விநாயகர் யானைவடிவில் வந்து வள்ளியைத் துரத்தியதாகவும் பின்னர் இங்கு தான் வள்ளி திருமணம் நடந்ததாகவும் ஒரு கதை உண்டு.
ஏழுமலை
கதிர்காமத்திற்கு அருகில் சுமார் 3 கி.மீ தூரத்தில் கதிரைமலை உள்ளது. இது ஏழு மலைத் தொடரின் மத்தியில் உள்ள மலையாகும். அங்கு முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ய எறிந்த வேல் ஒன்று இன்னும் இருப்பதாக நம்பப்படுகின்றது. இங்கு முருகன் ஆலயமும் பிற்காலப்பகுதியில் அமைக்கப் பெற்ற புத்த விகாரையும் அமைந்துள்ளன.
வள்ளி மலை
ஏழுமலை ஏறும் பெரும்பாலானவர்களுக்கு வள்ளிமலை என்று ஒன்றிருப்பது தெரியாது. ஏழுமலையில் இருந்தவாறே வள்ளிமலையை பார்க்கமுடியும். அங்கு வாகனங்கள் செல்வதில்லை கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். முருகன் வள்ளியை ஒளித்துவைத்த இடமாக நம்பப்படும் இவ் விடத்தில் குகை ஒன்று உள்ளது. கதிர்காமம் தமிழர்களின் பாரம்பரிய வணக்கஸ்தலம் என்பதை எடுத்துக்கூற இன்றுவரை இவ்விடம் மட்டும்தான் உள்ளது எனலாம்.
இங்குள்ள மரம் ஒன்றில் கற்கள் கட்டிவிடப்பட்டிருக்கும் என்ன புதுவித பிரார்த்தனை என்று நினைக்கிறீர்களா? ஏதாவது ஒன்றை மனதில் நினைத்து இந்த மரத்தினுள் கல் ஒன்றை கட்டி வைத்தால் நினைத்தது நடக்கும் என்பது அடியார்களின் நம்பிக்கை.
கிரிவேஹெற விகாரை
கதிர்காமம் சென்று வரும் எல்லாத் தமிழர்களுக்கும் இந்த விகாரையின் பெயர் தெரிந்திருக்கும். ஆனால், இந்த சிறப்பை அறிந்திருக்க மாட்டார்கள்.
கி.மு 580 களில் மகாசேன மன்னனால் 95 அடி உயரத்தில் கட்டப்பட்டது. புத்தரின் போதனைகளை கேட்ட மனாசேனன் அதற்கு நன்றின் கடனாக புத்தரின் புனித சின்னங்கள் வைத்து இவ்விகாரையை கட்டுவித்தான் என்று வரலாறு சொல்கிறது.
வெள்ளரசு மரம்
புத்தமதத்தை பாதுகாப்பதற்காக 3 ஆம் நூற்றாண்டில்
மகாசேன மன்னனால் அனுராதபுர வெள்ளரசுக்கிளையில் இருந்த ஒரு பகுதியை கொண்டுவந்து நாட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இலங்கையில் வெள்ளரசுக் கிளைகள் 8 இடங்களில் நாட்டப்பட்டுள்ளன இவற்றுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர்காமத்தில் பூசை செயும் பூசகர்களான சிங்கள மொழி பேசும் கப்புறாளை என்போர் தாங்கள் வள்ளி நாயகியின் வழித்தோன்றல்கள் என்று சோல்லிக் கொள்கின்றனர்.
கதிர்காமம் தமிழ்க்கடவுளாம் கந்தன் உறையும் திருத்தலம்
என்றாலும், இன்று சிங்கள மக்கள் அதிகமாக சென்று வழிபடும்
கத்தரகம ஆகியிருக்கிறது.
Comments
Post a Comment