சமுத்திரமா? குளமா? வியக்கவைக்கு பராக்கிரம சமுத்திரம்


வானிலிருந்து விழும் 
ஒரு துளி நீரையேனும் 
விவசாயத்திற்குப் பயன்படுத்தாது 
வீணே கடலைச் 
சென்றடைய விடமாட்டேன்

இந்தக் கூற்றைக் கொண்டு அமைந்த ஒரு நீர்த்தேக்கம்தான்  நீர்த்தேக்கங்களின் அரசன் என வர்ணிக்கப்படும் பராக்கிரம சமுத்திரம்.
இலங்கையின் மன்னர் ஆட்சியுடனும் கலை கலாசார பாரம்பரியத்தோடும் தொடர்புடைய நகரம் பொலன்னறுவை. சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்வதும் அங்குதான்.
அங்கிருக்கும் இன்னுமொரு சிறப்பு  பராக்கிரம சமுத்திரம்.
கி.பி. 1153 - 1186 காலப்பகுதியில் பொலன்னறுவையை தலைநகராகக்கொண்டு இலங்கை முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த, மாபெரும் மன்னராகத் திகழ்ந்த பராக்கிரமபாகுவினால் அமைக்கப்பட்டது இந்நீர்த்தேக்கம்.



பொலன்னறுவை நகரை அடைந்ததும் முதன் முதலாகச் சந்திக்கும் கால்வாய்த் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது பராக்கிரம சமுத்திரம். இது சமுத்திரமா? குளமா? என்று வியந்து பார்க்கும் அளவுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்திருக்கும்.
நீர்ப்பாசனத் துறையினதும், விவசாயத் துறையினதும் உன்னதமான மாபெரும் நிர்மாணிப்பு பராக்கிரம சமுத்திரம் என்று தான் சொல்ல   வேண்டும்.
பாரம்பரிய வாவிகளைப் போலன்றி சமுத்திரக் கொள்கைக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட பராக்கிரம சமுத்திரம் தோபா வாவி, எரமுது வாவி, தும்புட்டுழு வாவி, கல்லஹகல வாவி, பூ வாவி மற்றும் பெதி வாவி ஆகிய ஆறு வாவிகளின் ஒன்றிணைப்பால் உருவானது. பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டு எட்டு மைல் தூரமளவுக்கு நீளமுள்ளதாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. 


புனர் நிர்மாணிப்புப் பணிகளுக்கு முன் 55 அடி உயரமாக காணப்பட்ட குளக்கட்டு இன்று 40 அடி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பராக்கிரம சமுத்திரத்தின்
நீர்க்கொள்ளளவு 109,000 ஏக்கர் அடியாகும். நீர்த்தேக்கத்தின் மூன்று கலிங்கற்களினாலும் விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது.
இதன் மூலம் இன்று வரை 20,000 ஏக்கர் பயிர் நிலங்கள் போஷிக்கப்படுகின்றன. புராதன பராக்கிரம சமுத்திரத்துக்கு 11 நீர்ப்பாசனக் கால்வாய்கள் தொடர்புபட்டு இருந்ததாகப் புராதனக் கதைகள் கூறுகின்றன.
இந்நீர் தேக்கத்தை கட்டுவிப்பதற்காக
தொழில்நுட்பம் இன்றுவரை அறிந்துக்கொள்ள முடியாத அளவு வியக்கத்தக்க பிரமிப்பு மிக்க
தொழில்நுட்பத்தை கொண்டமைந்ததாகும்.         இன்றைக்கு ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும் நீர்த்தேக்கம் நம் நாட்டவரின் நீர்ப்பாசனத் துறை சார்ந்த அறிவை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றாகத் திகழ்கின்றது.

பராக்கிரம பாகு மன்னனின் சிலை
பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் பராமக்கிரம பாகு மன்னனின் சிலை அமைந்துள்ளது. விவசாயத்தில் தன்னிறைவினை ஏற்படுத்திய இந்த மகா சக்கரவர்த்தியின்  சிலை 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் பெரிய அரை வட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
பராக்கிரம மன்னனின் காலத்திற்குப் பிற்பட்ட மன்னர்கள் பலர் இச்சமுத்திரத்திற்கு உரிமை
கோரிய போதும் சமுத்திரத்தின் அருகாமையில் உள்ள சிலை இவ் அணைக்கட்டை இவரே
கட்டினார் என்பதற்கு சான்றாகிறது.
தொழில்நுட்ப வசதிகளோ நவீன இயந்திர வசதிகளோ இல்லாத அந்தக்காலத்திலேயே இவ்வாறான பெரிய திட்டங்கள், சிலைகள் மனித வளத்தை மட்டுமே பயன்படுத்தி கட்டு
விக்கப்பட்டுள்ளமை மக்கள் நலனை மட்டுமே அல்ல அவர்கள் எதிர்கால சந்ததிகளையும் எண்ணி செயற்பட்டுள்ளனர் என்பதை பறைசாற்றுகிறது.



Comments