இந்து கோவிலின் வடிவில் ஒரு பௌத்த விகாரை



விகாரைகளின் தோற்றம் நம் எல்லோருக்கும்  தெரியும். ஆனால், இந்துக் கோவில்களைப் போன்று  கோபுரம், கருவறை, காவல் தெய்வங்கள் என அமைந்த வித்தியாசமான விகாரை மாத்தளை மாவட்டத்தில் காணப்படுகிறது! 


மாத்தளை மாவட்டத்தில் ஏ9 பாதையில் இருந்து கிழக்கே 1.2 கிலோ மீற்றர் தொலைவில் இயற்கை  அரணான குளத்தால் சூழப்பட்டு அமைந்துள்ளது இந்த விகாரை . 

இது இலங்கையர்கள் பலர் அறியப்படாத ஒரு தொன்பொருளியல் இடமாகும். இன்று இடிபாடுகளுடன் முற்றாக அழிந்து போகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இந்த விகாரை மண்டபம் 8ஆம் - 10ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

இக்காலப்பகுதியில்  இலங்கைத் தீவில் சிங்கள முடியாட்சி சரிவைக் கண்டு கொண்டிருந்தது, தென் இந்திய அரசர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நாட்டிக் கொண்டிருந்தார்கள். 

இந்தச் சூழ்நிலையகில்தான் இலங்கையில் ஆதிக்கத்தை நிலைநாட்டிய பல்லவர்களால் பௌத்த, இந்து கலாச்சாரத்தை இணைக்கும் விதமாக சிறப்பான கட்டிடக்கலை அம்சங்களோடு இந்த நாலந்த சிலை விகாரை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஏனைய சிலை மண்டபங்கள் செங்கற்களால் ஆனவை. நாலந்த சிலை மண்டபம் மட்டும் தான் கருங்கற்களால் ஆனது. பல்லவர்கள் மாமல்லபுரத்தில் கட்டிய பஞ்சரதங்கள் கட்டிடங்களில் ஒன்றான கணேச ரதத்தின் விமான அமைப்பைத் தழுவியே நாலந்த சிலை மண்டபம் அமைந்துள்ளது.

கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்த சிலை மண்டபம் ஒரு சிறிய தாது கோபுரத்தையும் உள்ளடக்கியுள்ளது. செங்கற்களினாலான குட்டைச் சுவர் அதில் இந்துக்களின் காவல் தெய்வங்கள், மகா லக்ஷ்மி ஆவுடையார் ஆகியோரின் வடிவங்கள் காட்சிதருகின்றன. கருவறையில் இரண்டு புத்தர் சிலைகள் காணப்படுவதுடன், மகாயான போதிசத்வர் சிற்பத்தைக் கொண்ட ஒரு கற்பலகையும், காவற்கல், ஒரு பிள்ளையார், குபேரன், இந்திரஜித் ஆகியோரின் சிலைகளும் இங்கு உள்ளன. 

பல்லவர் காலத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டது என்றாலும் இந்த மண்டபத்தின் வரவாறு இராமயாணத்துடன் தொடபுடையது என்றும் வாய்மொழிமூல வரலாறு காணப்படுகிறது. 

இராவணன் இலங்கையை ஆட்சி செய்வதற்கு முன் இலங்கையை குபேரன் ஆட்சி செய்ததாக சிங்களவர்கள் நம்புகிறார்கள். குபேரனை சிங்களவர்கள் குபேர ரஜூ என அழைக்கிறார்கள். இந்த சிலை மண்டபத்தில் குபேரனின் சிலை இருப்பது முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். குபேரன் சிலைக்கு எதிர் முனையில் இராவணனின் மகனான இந்திரஜித்தின் சிலையும் காணப்படுகின்றது. 
மேகநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இந்திரஜித் தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் இந்திரஜித் என்ற சிறப்புப் பெயர் பெற்றான் என்கின்றன இதிகாசங்கள். இந்த இந்திரஜித் பிரம்மாவை வேண்டி தவம் செய்த திருத்தலம் இது என நம்பப்படுகிறது. 

 அதிக வலிமைக் கொண்ட ஒரு ஆயுதம் வேண்டி பிரமாடன நோக்கி இந்திரஜித் தவம் செய்த இடம் இது. இதனை நினைவுகூறும் விதமாகவே இத் திருத்தலம் அமைக்கப்பட்டதாக  சிங்கள மக்கள் நம்புகிறார்கள். இத்தலத்தை இந்திரஜித் இவ்வாலயத்தை அமைப்பதற்கு உதவியாக பெரும் வல்லமைப்படைத்த ஒருவர் உதவியதாகவும் அவரை கௌரவிக்கும் விதமாகவே நாலந்த கட்டிடத்தில் கூரையில் அவரின் உருவத்தை செதுக்கியதாக வாய்மொழிகதைகள் கூறுகின்றன. 

இவை வாய்மொழிக்கதைகள் என்றாலும் கூடு இக்கட்டடிடத்தின் விமான கூரையின் மீது ஒரு புறம் குபேர பகவானும் மறுபுறத்தில் பெயர் தெரியாத ஒருவரிஜ் உருவம் ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு பல வரலாற்று புதையல்களை தன்னகத்தே கொண்டுள்ள நாலந்த சிலை மண்டபம் பௌத்தர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் விலைமதிப்பற்ற பொக்கிசம் தான்.

Comments