அவிசாவளை நகரிலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோ மீற்றர் தொலைவில் தல்துவ எனும் கிராமத்தில் இடிபாடுகளுடன் காணப்படுகின்றது பெரண்டி ஆலயம். ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இவ் ஆலயம் இன்று கவனிப்பாரற்று இடிபாடுகளுடன் காணப்படுகின்றது.
கண்டி இராச்சியத்தை ஆண்ட முதலாம் இராஜ சிங்க மன்னன் ஆட்சிக்காலத்தில் தனக்கு ஆசி வேண்டியும், மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவும் காவல் தெய்வ வழிபாட்டை முன்னெடுத்துள்ளான் என வரலாறுகள் கூறுகின்றன.
எனவே, இந்து தெய்வங்களின் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த முதலாம் இராஜசிங்க சிவ வழிபாட்டை மேற்கொள்ள விரும்பி
சிவனின் இன்னுமோர் அவதாரமாக வைரவரை காவல் தெய்வமாக வழிபட ஆரம்பித்தான். இதற்காகவே இந்த பெரண்டி ஆலயத்தை கட்டுவித்ததாக சொல்லப்படுகிறது.
வைரவரை சிங்களவர் பைரவயா அல்லது பைரவ தெய்யா என அழைக்கும் வழக்கு உள்ளபோதும் பெரண்டி என்பதற்கான சிங்கள விளக்கமோ, பெயர் காரணமோ சரியாக இன்றுவரை அறியப்படவில்லை. இருப்பினும் பைரவயா எனும் பெயரே காலப்போக்கில் மருவி பெரண்டி என திரிபடைந்திருக்கலாம் எனும் ஒரு கூற்று உள்ளது. இவ்வாறே இந்து தெய்வமான வைரவர் பௌத்தர்களின் பெரண்டினா தெய்யோ ஆனார்.
இந்த ஆலயம் பற்றிய கதை மிக ஆச்சரியமானது, ஆலயத்தை கட்டுவிப்பதற்காக கட்டிட கலையிலும், சாஸ்திரங்களிலும் கைத்தேர்ந்த நிபுணர் ஒருவரை இந்தியாவில் இருந்து வரவழைத்தான்.
சாஸ்திரங்களில் அனுபவம் கொண்ட முதலாம் இராஜசிங்கன் தனது இராச்சியத்தில் ஒவ்வொரு கட்டிடங்களையும் பார்த்து பார்த்து அமைத்துக்கொண்டான்.
சீத்தாவக்கை இராச்சியத்தில் சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து அதனை வேறு திசைக்குத் திருப்பி கோயிலை கட்ட வேண்டும் என எண்ணினான்.
ஆற்றைத் திசைதிருப்புவது பாவச்செயல் என்பதுடன் அதனால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர் எச்சரித்தார். இதையும் மீறி ஆற்றை மறித்து
கோவிலை கட்டினால் கோவிலை அமைத்த நான் அரசன், ஆறு இந்த மூன்றில் ஒன்று இல்லாமல் போகும் எனத் தெரிவித்துள்ளார். அவரின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத இராஜசிங்கன் கோயிலைக் கட்டுமாறு பணித்துள்ளான். அதன்பிரகாரம் கடுமையான உழைப்பின் பின்னர் ஆற்றை மறித்து இந்தக் கோயில் அமைக்கப்பட்டது.
சுமார் 2ஆயிரம் பேரின் கடுமையான உழைப்பில் ஏழு அடுக்குகளைக் கொண்டதாக இவ் ஆலயம் கட்டி எழுப்பப்பட்டது.
சாஸ்திரியரின் வார்த்தைகளை உதாசீனப்படுத்தி ஆலயத்தை அமைத்த முதலாம் இராஜ சிங்கன் அவரின் வாக்கின் படியே போர் முடிவடைந்து வரும் வழியில் மூங்கில் சிறாய் குற்றி உயிரரிழந்ததாக வரலாறு கூறுகின்றது.
போர்த்துக்கீசர் இலங்கையை ஆண்ட காலத்தில் இந்து ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அக்காலப்பகுதியில் இவ் ஆலயமும் இடிக்கப்பட்டது.
ஆலயத்தின் சிலைகள் உட்பட பெறுமதியான பொருட்கள் அழிக்கப்பட்டன. அன்று முதல் இன்றுவரை சிதைவுற்ற நிலையிலேயே இவ் ஆலயம் காணப்படுகிறது. முதலாம் இராஜசிங்கனால் கட்டுவிக்கப்பட்ட இவ்வாலயம் இற்றைக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
நேரத்தை கழிப்பதற்காக சுற்றுலா தளங்களை தெரிவு செய்பவர்கள், நம் நாட்டில் நமக்கேயுரிய கலாசார பாரம் பரிய இடங்களை பார்வையிடுவதற்காக காலத்தை செலவு செய்வதன் மூலம்
தமிழுக்கே ஆன பாரம்பரிய இடங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
Comments
Post a Comment