இத்தனை சிறப்புமிக்க அபயகிரி விகாரை ஒரு வரலாற்றுக் கறையையும் சுமந்து நிற்கிறது. தமிழ் பிராமணர் ஒருவரை பலி தீர்ப்பதற்காக வலகம்பா மன்னன் அவரைக் கொன்று, பிராமணப்பள்ளியைத் தகர்த்து அந்த இடத்தில் அமைக்கப்பட்டதே அபயகிரி என்று வரலாறு கூறுகின்றது.
அபயகிரி விகாரை அனுராதபுர நகரில் இருந்து 6.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விகாரையின் தோற்றக்கதை தமிழர்களுடன் தொடர்புடையதாகும்.
103 இல் சிம்மாசனம் ஏறிய வலகம்பா மன்னன் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் இந்தியாவில் இருந்து எழுவரின் படையெடுப்பு நடந்தது. அதே காலக்கட்டத்தில் வலகம்பா மன்னன் ஆட்சியை விருப்பாமல் ருகுணுவில் தீகாமினி என்பவர் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ஒரே சந்தர்ப்பத்தில் இந்திய படையெடுப்பு, உள்நாட்டு கிளர்ச்சி இரண்டும் இடம்பெற இரண்டு சவாலையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாமல் தடுமாறினான் வலகம்பா. இதனால் தந்திரமாக தீகாமினியிடம் நீ போய் தென்னிந்திய படையெடுப்பை முறியடித்தால் இராச்சியத்தை நானே உனக்கு தருகின்றேன் என வலகம்பா கூறினான். ஆனால், தென்னிந்திய படையெடுப்பை தீகாமினியால் முறியடிக்க முடியவில்லை. மாந்தையில் இருந்து தென்னிந்திய படை அனுராத புரத்தை கைப்பற்ற முன்னோக்கி வர ஆரம்பித்ததும் இராச்சியத்தைவிட்டுத் தப்பி ஓடமுனைகிறான் வலகம்பா.
மன்னன் தப்பி செல்வதை பார்த்த கிரி என்ற பிராமணர் கறுத்த சிங்களவன் ஓடிப்போகிறான் என பரிகாசித்தார். இதனை கேட்டு கோபத்தை தனக்குள் அடக்கிக்கொண்டு தப்பி சென்ற வலகம்பா 14 வருடங்களின் பின்னர் கி.மு 89 மீண்டும் ஆட்சியை கைப்பற்றினான். தனது மனதில் 14 வருடங்கள் அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தவும் தான் மறைந்திருந்த காலத்தில் தனக்கு உதவிய குப்பிகல திஸ்ஸீ தேரருக்கு பரிசளிப்பதற்காகவும் கிரியின் பிராமணப்பள்ளியை தகர்த்து, அவரை கொன்று அவ்விடத்தில் புதைத்து விகாரை ஒன்றை கட்டுவித்தான். அதன்பின் தன் பெயரையும் பிராமணரின் பெயரையும் இணைத்து அபயகிரி என விகாரைக்கு பெயர் சூட்டினான் என வரலாறுகள் சொல்கின்றன.
பிற்காலத்தில் இவ்விகாரை பௌத்தத்தின் பிரதான பிரிவான மகாயானவின் நிலைக்கண்ணாக விளங்கியது.
அபயகிரியின் வெளிநாட்டு உறவுகளும், கட்டிடக்கலையும்
வலகம்பா மன்னன் பௌத்த மதத்தை மேலோங்க செய்வதற்காக சீனா, ஜாவா, காஸ்மீர் போன்ற பல தேசங்களில் இருந்து கல்விகற்ற மேதைகளையும், வான சாஸ்திரம் கூறும் அறிஞர்களையும் அழைத்து வந்து தூபியை கட்டுவித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
இங்குள்ள கட்டிடங்கள், சிற்பங்கள், நிழல்களை சார்ந்திருக்கின்ற வகையில் கட்டுமானப்பணிகள் நிறுவப்பட்டது. வலகம்பா மன்னின் வரலாறு கூறுகின்ற சாதனைகளில் குறிப்பிடத்தக்க சாதனை அதுவாகும். சீன கலைஞர்களின் சாயலில் சீனாவின் நன்ஜிங் விகாரையை ஒத்ததாக அபயகிரி விகாரை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விகாரையின் மரபுகள்
அமிதபா புத்தர் சிலைகளுக்கு பூஜை செய்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட துறவிகளே அபயகிரி விகாரையில் பூஜைகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு நாதா எனப்படுகின்ற பெயரும் உண்டு.
அனுராதபுரத்தில் மிக முக்கிய ஐந்து பௌத்த விகாரைகளில் மிக முக்கிய விகாரையாக அபயகிரி விகாரை கருத்திற்கொள்ளப்பட்டது. மிக முக்கியமாக குறிப்பிடும் போது அபயகிரி விகாரை தூபி வடக்குபுறம் நின்று மொனஸ்தரி அல்லது உத்த விகாரையை கண்டுகளிப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment