கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் கங்காராம எரி


இலங்கையில் அனைத்து பாகங்களில் இருந்தும் சுற்றுலாத்துறையினர் வந்து செல்லும் இடங்களில் கொழும்பு முக்கியம் பெறுகிறது. அதிலும் பாடசாலை மாணவர்கள் இலங்கையின் தலைநகரை பார்வையிடுவதில்  பெரும் எதிர்பார்ப்போடு வருகிறார்கள்.  இப்படி சுற்றுலா வருபவர்கள் வழமையான இடங்களான மிருகக்காட்சிசாலை, பூங்கா, கோள் மண்டலம் என பார்வையிட்டு சென்று விடுகிறார்கள். ஆனால், கொழும்பு 02 இல் தண்ணீர் தடாகத்தின் மேல் மலைநாட்டிற்கே உரித்தான இயற்கையையும் தன்னகத்தே கொண்டமைந்திருக்கிறது கங்காராம ஏரி.


கொழும்பு புறக்கோட்டையில் இருந்து 3.4 கிலோமீற்றர் தொலைவில் சுமார் 10 நிமிடங்களில் சென்றடைய கூடிய தூரத்தில் அமைந்துள்ளது கங்காராம ஏரி. 

ஏரியின் மத்தியில் விகாரை சுற்றிலும் உள்ள அழகும் இயற்கையும் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இந்த  கங்காராமையின் இன்னுமோர் சிறப்புதான் ஆடுபாலம். நீண்ட ஆடுபாலம் விகாரையையும் பிரதான வீதியையும் இணைக்கிறது. 
ஆடுபாலத்தின் முடிவில் ஓய்வெடுப்பதற்கும் விளையாடி திரிவதற்கும் ஏற்றதாய் புல்வெளிகளுடன் கூடிய அமைதியான இடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தவாறே கங்காராம ஏரியின் மொத்த அழகையும் இரசிக்க முடியும். 
அதுமட்டுமின்றி போட்டிங் வசதிகளும் இங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவில் பாதுகாப்பான இடங்கள் என்று வரையறுக்கப்பட்ட பிரதேசத்திற்குள் போட்டில் உலாவர முடியும். இதில் இன்னுமொரு ஸ்பெஷலும் இருக்கிறது. வெசாக் தினங்களில் இரவு நேரங்களில் கங்காராம ஏரியை சுற்றியிருக்கும் மரங்கள் மின்குமிழ்கள், வெசாக் கூடுகளால் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளமையை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. 

இப்படி களியாட்டங்கள் மட்டுமின்றி இலங்கையின் பிரசித்திபெற்ற கங்காராம விகாரையும் இதனை சூழதான் அமைந்துள்ளது. அதில் ஒரு பகுதியாக ஏரியின் நடுவே விகாரையும் அமையப்பெற்றுள்ளது. பெரும்பாலும் கங்காராம ஏரிக்கு செல்பவர்கள் இந்த விகாரையையும்  சென்று பார்வையிட்டுதான் வருவார்கள். 
ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு செல்வதற்கு மரப்பலகையான பாதைவழி காணப்படுகிறது. இவ்விகாரையின் முன்பே சயனசிலை புத்தர் சிலையை பார்த்ததுமே இனந்தெரியாத ஒரு அமைதியை உணரமுடியும். கங்காராம விகாரை நவீன கட்டிடக்கலையுடன் கூடிய நவீன கலைத்தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன சாயல் மிகுந்த விகாரை இலங்கையின் இதுதான். 

இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளின் கலை தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டது. இவ்விகாரையில் சூழல் சதுப்புநிலத்தாலானது. இதை சுற்றியுள்ள இடங்களில் வெள்ளரசு மரம், கருவறை, துறவி மண்டபம் இவை தவிர அருங்காட்சியகம், நூலகம் என்பனவற்றுடன் மூன்று பிரிவேனாக்கள் இதில் உள்ளன.கொழும்பை பொறுத்தவரை அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் இதுவும் ஒன்று.
டொன் பெஸ்டியன் என்ற இங்கிலாந்து பணக்காரர் ஒரு வரும், டீ.சில்வா ஜெயசூரிய குணவர்தன, முதலியார் போன்றோர் இணைந்து 19 ஆம் நுற்றாண்டில் மாத்தறை ஸ்ரீதருமாராமதேரரிடம் ஆலோசனைப் பெற்றே பெரும் செலவில் இவ்விகாரையை அமைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன. 

இவ்விகாரையின் கூரை மரத்தாலானது. இதில் செய்யப்பட்டுள்ள   வேலைப்பாடுகள் இலங்கையின் கலை கலாசாரத்துடன்தொடர்புடைய சித்திர கதைகள் ஆகும். இவ்விகாரையை சூழ ஏராளமான புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன இவை அனைத்தும் ஒரே 
மாதியானவை. புகைப்படங்கள் எடுப்பதற்கு சிறந்த இடமும் கூட.

Comments