நான்கு நூற்றாண்டுகள் கடந்துள்ள போகொட மரப்பாலம்


காலத்தால் அழியாத நீண்ட வரலாற்றைக் கொண்ட  அதிசயங்கள் படைப்புகள் பலவற்றை நாம்கேள்விப்பட் டுள்ளோம்.  நம் நாட்டிலும் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரப்பாலம் ஒன்று  பதுளை மாவட்டத்தில் உள்ளது.
16 ஆம் நூற்றாண்டு தம்பதெனியக் காலத்தில் கட்டப்பட்ட போகொட மரப்பாலம் இலங்கையில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த மரப்பாலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து ஹாலி- எல நகரத்தை நெருங்கிச் செல்லும் போது கலந்த ஓயாவின் ஒரு கிளைபிரிவு நதியான உமா ஓயா நதிக்கு மிக அருகாமையில் கண்டியையும் பதுளையையும் இணைக்கும் பழைய பாதை ஒன்றில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது போகொட மரப்பாலம்.
இப்பாலம் 100 வீதம் மரத்தாலானது. இப்பாலத்துக்கான பலகைகள் ஒரே மரத்தில் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்தோடு இப்பாலத்தில் உள்ள பலகைகளை பொருத்துவதற்கான ஆணிகள் உட்பட எல்லாப் பகுதிகளுமே மரத்தால் செய்யப்பட்டவை. கூரை ஓடுகள் கண்டி இராச்சியத்தின் செல்வாக்கைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



1612 ஆம் ஆண்டு இலங்கையை ஆண்ட  வலகம்பா மன்னனின் ஆட்சிக்காலத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.
பாலம் கட்டப்பட்டு சில காலங்களில் அந்நிய படையெடுப்புக்களினால் இப் பாலம் சேதமாக்கப்பட்டதுடன் வேட்டைக்காரர்கள்,புதையல் திருடும் நோக்கம் கொண்டு இந்த பாலத்தை இடிபாடுகளுக்கு உட்படுத்தினார்கள்.
அம்பலா ஆலயம்இந்து கடவுள் விஷ்ணுவின் பெயர் கூறும் வகையில் இந்த பாலத்துக்கு அருகாமையில் இம்பல என்று கூறப்படும் ஆலயம் ஒன்று அமையப் பெற்றுள்ளது.  பின்னர் படிப்படியாக பௌத்தத்தின் ஆதிக்கத்திற்குள்ளாகி பௌத்தவிகாரையாக தற்போது
 காணப்படுகிறது.
இவ்வாலயம் பாலத்திற்கும் முற்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஏறத்தாழ அனுராதபுரக் காலத்தில் கி.மு முதலாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது அரசன் வலகம்பாவின் கட்டளைப்படி அமைக்கப்பட்டது. இங்குள்ள பிராமி எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டொன்றின்படி இக்கோயில் பதுளையின் உள்ளூர்த் தலைவரான திஸ்ஸ என்பவரால் பிரம்மதத்தர் என்னும் மதகுருவுக்கு வழங்கப்பட்டது.
விகாரையின் உள்ளே கண்டி இராச்சியக் காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன. இவ் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள சுவர்கள் பருத்திப் பஞ்சு, தேன், சுத்தப்படுத்திய களிமண் என்பவற்றின் கலவையால் கட்டப்பட்டது.
இலங்கையின் ஊவா மாகாணத்தில் எத்தனையோ சுற்றுலாத் தளங்கள் இருந்தாலும் கூட இந்த மரப்பாலம் ஒரு பொக்கிஷம். 400 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் போகொட மரப்பாலம் இலங்கையின் பிரமிக்கத்தக்க கலை அம்சங்களை கொண்டவை என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.  நம்நாட்டவர்கள் கட்டாயம் சென்று பார்க்க  வேண்டிய இடங்களுள் போகொட மரப்பாலமும் ஒன்று.

Comments