சோழர்கள் தலைநகராக்கி ஆட்சிப் பீடம் ஏறியதுடன்,
சிவ வழிபாடு தழைத் தோங்கியதுடன், கலைகளில் திராவிட கட்டிடக்கலைப் பாணிகள் இணைக்கப்பட்டதும், இக்காலத்தில்தான். சோழர்கள் பொலன்னறுவையை கைப்பற்றும் வரை இலங்கையில் இந்து தெய்வங்களின் ஆலயங்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை. காரணம் இலங்கை பௌத்த நாடாக இருந்தமையால் இந்துக்கள் ஆலயங்களை அமைத்து வழிபடுவதற்கான சூழல் காணப்படவில்லை. ஆனால், சோழர்களின் வருகையால் நம் நாட்டு இந்துக்களின் காலம் மாறிப் போனது. பல இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டன. ஏறக்குறைய சோழர், பாண்டியர் காலத்தில் 16 ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றுள் 10 சிவன் ஆலயங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படிக் கட்டப்பட்டது தான் இரண்டாம் சிவன் ஆலயம் என கூறப்படும் வானவன் மாதேவி ஈச்சரம். இலங்கையின் ஈச்சரங்களுள் வித்தியாசமான பெயர் கொண்ட இவ்வாலயத்தின் பெயரைப் போலவே தோற்றக்கதையும் வித்தியாசம் தான். பொலன்னறுவை நகரில் இருந்து வடக்கே 2 கிலோ மீற்றர் தொலைவில் பராக்கிரம சமுத்திரத்தை அண்டி அமைந்துள்ளது வானவன் மாதேவி ஈச்சரம்.
10ஆம் நூற்றாண்டின் இறுதித் தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள் அமைத்த கோயில்களுள், முழுமையாக இன்றுவரை எஞ்சியுள்ளது இவ் ஆலயம் மட்டும் தான். இக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டுச் சான்றைக் கொண்டு இக்கோயில் 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது. இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திர சோழனின் தாயின் பெயர் வானவன் மாதேவி. எனவே, தனது தாயின் பெயராலேயே இந்தக் கோயிலை முதலாம் இராஜேந்திர சோழன் கட்டுவித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாலய கட்டுமானப்பணிகளுக்காக சிற்பிகள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டதாக வரலாறுகள்
சான்றுபகர்கின்றன.
சான்றுபகர்கின்றன.
வானவன் மாதேவி ஈச்சர கட்டிடக்கலை திராவிடக் கட்டிடக்கலையின் சோழர் பாணியின் ஆரம்பகாலத்தைப் பிரதிபலிக்கின்றது. சோழர்களின் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைப் படைப்புக்களில் இக் கோயிலும் ஒன்று.
அத்தோடு, இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஏனைய கோயில்களும் இப்பாணியையே பின்பற்றி கட்டப்பட்டன எனலாம். கற்களை அப்படியே வைத்து சிற்பங்களை செதுக்கும் புடைப்பு முறையிலான சிற்பக்கலை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.
இக் கட்டிடம் தமிழ் நாட்டில் கட்டப்பட்ட கோயில் களைப் போலன்றி, அளவில் சிறியதாகக் காணப்படுகின்றது. கருவறையையும், அதன் முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்ட இக்கோயிலின் கருவறையின் வெளிப்புறம் சதுர வடிவமானது.
இந்துகளின் பெயர் சொல்ல கட்டுவிக்கப்பட்ட இவ்வாறான ஆலயங்கள் இந்துக்கள் மட்டுமல்ல அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாகும். சிதைவுகளுடன் இன்று வெறும் சுற்றுலாத்தளமாக
மட்டுமே உள்ள இந்த ஆலயம், இலங்கை தொல்பொருள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
Comments
Post a Comment