நன்றிக்கடனின் நினைவுச் சின்னம் ரீதி விகாரை

காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் அது ஞாலத்தின் மானப் பெரிது  என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஒப்ப துட்டகைமுனு மன்னன் நன்றி செலுத்துவதற்காக   கட்டுவித்தது தான் ரிதி விகாரை.
குருநாகல் நகருக்கு வடகிழக்கில் 18 கிலோமீற்றர் தொலைவில் குருநாகலையும், தம்புள்ளையையும் இணைக்கும் ஏ6 நெடுஞ்சாலையில் இப்பாகமுவை என்னும் இடத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் ரிதிகம என்னும் ஊரில் அமைந்துள்ளது  இந்த விகாரை.  எல்லா விகாரைகளுக்கும் ஒரு தோற்றக் கதை இருக்கும். இந்த விகாரைக்கான தோற்றக்கதை மிகச் சுவாரஷ்யமானது.


அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய  துட்டகைமுனு கி.மு 161 முதல் கி.மு 137 வரை அனுராதபுரத்தை ஆண்டான். இவன் தனது   ஆட்சிக் காலத்தில் மிக  உயரமான, பெரிய தாதுகோபுரமான ருவான்வெலிசாயவைக் கட்டுவிக்கத் தொடங்கினான். இவ்விகாரையை பிரம்மாண்டமாக கட்ட எண்ணிய துட்டகைமுனு ருவன் வெலிசாயவின் அடித்தளத்தை வெள்ளியைக்கொண்டு அமைக்க ஆசைப்பட்டான். அவன் எண்ணப்படி வெள்ளியும் கிடைத்தது. ஆனால், அவை முழுமையான விகாரையின் அடித்தளத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை.
இக்காலத்தில், சில வணிகர்கள் இலங்கையின் மத்திய மலைநாட்டில் இருந்து தலைநகர் நோக்கி வணிகநோக்கத்துக்காக வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர் வரும் வழியில் ஒரு முறை ரிதிகமப் பகுதியில் இவர்களுக்குப் பழுத்த பலாப்பழம் ஒன்று கிடைத்துள்ளது. அதை வெட்டிய அவர்கள் அதில் முதல் பாதியை பௌத்த துறவிகளுக்குத் தானமாகக் கொடுக்க எண்ணினர். அவர்களின் வேண்டுகோளின்படி முதலில் நான்கு பௌத்த துறவிகள் தானம் பெற்றுச் சென்றனர். இறுதியாக வந்த இந்திரகுப்தர் என்னும் பெயர் கொண்ட துறவி வணிகர்கள் கொடுத்த தானத்தை ஏற்றுக்கொண்டதுடன் அதற்கு பிரதி உபகாரமாக வெள்ளித்தாது இருந்த குகையொன்றுக்கு வழிகாட்டினார். 
வணிகர்கள் அனுராதபுரம் சென்றதையும் தாம் கண்ட குகை குறித்தும் அரசனுக்கு அறிவித்தனர். இதைக் கேள்வியுற்ற மன்னன் மிகவும் மகிழ்ச்சியுற்றான். அந்தக் குகையில் இருந்து ருவான்வெலிசாய கட்டுமானத்துக்குத் தேவையான வெள்ளி பெற்றுக்கொள்ளப்பட்டது. 
இதற்கு நன்றியாக வெள்ளித்தாது இருந்த இடத்தில், துட்டகைமுனு மன்னன் ஒரு விகாரையைக் கட்டினான். இக்கட்டிடவேலையில் 300 கொத்தனார்களும், 700 பிற வேலையாட்களும் ஈடுபடுத்தப்பட்டனர். 
இது கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேரவாத புத்த கோயில் ஆகும். ரிதி என்பது சிங்களத்தில் வெள்ளியைக் குறிப்பதால் ரிதி விகாரை, வெள்ளிக் கோயில் என அழைக்கப்பட்டது. 
ருவான்வெலிசாயவைக் கட்டி முடிப்பதற்குத் தேவையான வெள்ளித் தாது பெறப்பட்டமை தொடர்பில், இலங்கையின் பழைய வரலாற்று நூல்களான மகாவம்சம், தூபவம்சம் என்பன சான்றுபகர்கின்றன.
இக்கோயிலைச் சுற்றி ஏறத்தாழ 25 குகைகள் உள்ளன. கிமு 3ஆம் நூற்றாண்டில் மகிந்த தேரர் இலங்கைக்கு வந்த காலத்தில் இருந்தே இக்குகைகளில் பௌத்த துறவிகள் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகின்றது. 
18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கண்டியின் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில்  இவ்விகாரை திருத்தப்பட்டது. அவ்விகாரையை சூழ குமார பண்டார தேவாலயம், பத்தினி தேவாலயம் போன்றனவும் அக்காலத்தில் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.          
                                        

Comments