இந்திய வம்சா வழியினரின் துயரச்சின்னம் - அம்மன்னீல்கோட்டை

இந்திய வம்சா வழியினரின் துயரச்சின்னம்


காரைநகர் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒடுங்கிய கடற்பகுதியில் சிறிய மணற்திட்டு ஒன்றில்  கம்பீரமாக காட்சி தருகிறது அம்மன்னீல்கோட்டை.



பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வருவதற்கான மிக முக்கிய கடல்வழிப்பாதை  இதுவாகும். எதிரிகளிடமிருந்து நாட்டைப்  பாதுகாப்பதற்காக
பாதுகாப்பு அரணாக அம்மன்னீல்
கோட்டை போர்த்துக்கீசரால் எழுப்பப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
1620 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது ஆட்சியின்கீழ் கொண்டுவந்த பின்னர் இக்கோட்டை அமைக்கப்பட்டதாக  சொல்லப்படுகிறது.
இன்று மிக அழகான சுற்றுலாத்தலமாக காட்சித்தரும் இந்த கோட்டை இந்திய வம்சாவளி மக்களைப் பொறுத்தவரை ஒரு துயரச்சின்னம் என்பது நம்மில் பலர் அறியாத உண்மை. கூலிகளாக இங்கே அழைத்துவரப்பட்ட அப்பாவி இந்தியத்தமிழர் அனுபவித்த துயரத்திற்கும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும்  இந்தக் கோட்டை ஒரு சாட்சிப்பதிவு.
 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலி தொழில்களுக்காக வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் பாக்கு நீரிணை வழியே அழைத்து வரப்பட்டனர். இப்படி வரவழைக்கப்பட்டவர்கள் வந்திறங்கிய இடம் தான் அம்மன்னீல் கோட்டை.
இங்கேதான் நாட்டுக்குள் நுழையத் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆம் வெகு தூரம் கடல் பயணம் செய்து நொந்து போயிருந்த இவர்கள் பல நோய்களால் பீடிக்கப்பட்டார்கள். அம்மை, கொலரா போன்ற நோய்களுக்கு ஆட்பட்டார்கள்.
இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மூலம் நோய்  மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க நோயுற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதாவது நோயுற்றவர்கள் அம்மன்னீல் கோட்டையின் இருண்ட அறைகளில் அடைக்கப்பட்டனர்.
நோயுற்ற தம் உறவுகளை அங்கேயே விட்டுவிட்டு கண்ணீரோடும் ஆற்றாமையோடும் மற்றவர்கள் மலையகம் நோக்கி பயணம் செய்தார்கள்.  நோயுற்றவர்களுக்கு இங்கே சிகிச்சை வழங்கப்பட்டது என்று நினைத்து விடாதீர்கள். சிகிச்சை எதுவும் கிடையாது. தனிமையிலும் நோயிலும் வாடும்  இவர்கள் தானாக குணமடைந்தால் மட்டுமே உறவுகளுடன் வந்து சேர்ந்து வாழ முடியும் இல்லையென்றால் அந்த சிறைக்குள்ளேயே இறந்துவிடவேண்டியதுதான்.
இப்படி மனிதாபிமானமின்றி நடத்தப்பட்ட நம்மவர்கள் பட்ட துயரங்களை அங்குள்ள சுவர்களுக்கு கூட வாயிருந்தால் சொல்லும். ஆங்கிலேயரினால் இப்படி தனிமைப்படுத்தும் மருத்துவமனையாகவும், சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்ட இந்தக் கோட்டை கட்டப்பட்ட நோக்கமே வேறு.
இக்கோட்டை 17ஆம் நுற்றாண்டில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் கட்டுவிக்கப்பட்டதாக நம்பப்படும்                    இக்கோட்டை பன்றியின் கால் வடிவத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. பல்கோண வடிவத்தைக் கொண்ட இக் கோட்டையின் தெற்குப் பக்கத்தில் உள்ள சுவரில் தான் பிரதான வாயில் அமையப்பெற்றுள்ளது.
போர்த்துக்கீசருக்குப்பின் 1658 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகை இட்டபோது இக் கோட்டையை கைப்பற்றிக் கொண்டனர். ஒல்லாந்தரால் சிறந்த முறையில் பேணி பாதுகாக்கப்பட்ட இக்கோட்டை 1795 ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆளுகைக்குள் வந்தது. பிரித்தானியர்கள் இக்கோட்டையின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
மாறாக 1930 ஆம் ஆண்டுகளில் அம்மன்னீல் கோட்டை  நோயாளர்களைத் தனிமைப்படுத்தும் நிலையமாகப் பயன்பட்டதாகவும் அதற்கு பிற்பட்ட காலத்தில் சிறைக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
பிரித்தானியர் காலத்தில் ஊர்காவற்றுறை முக்கிய கடற்படைத்தளமாக விளங்காத போதும் கப்பல் மூலம் பயணம் செய்வோருக்கு நுழைவுச்சீட்டு இக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக வரலாற்று கதைகள் கூறுகின்றன. இலங்கை நோக்கி வரும் கப்பல்கள் இந்த கோட்டையில் வைத்தே ஆராய்ந்து சோதனை செய்யப்பட்டன.  இலங்கைக்கு கப்பல் மூலம் வரும் பகையை இக்கோட்டையே அக்காலத்தில் தடுத்தது எனலாம்.
 பிரித்தானியர் காலத்தில் சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட இக்கோட்டையில் ஆயுள் தண்டனை கைதிகளே சிறைப்படுத்தப்பட்டார்கள். சில காலம் அம்மன்னீல்கோட்டை தொல்லியல் திணைக்களப்பொறுப்பில் இருந்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை அழகுடன் கடலின் மத்தியில் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்தக்கோட்டை தற்போது ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

Comments