(Chankanai Dutch Church)
ஒல்லாந்தரினால் கட்டப்பட்ட பல தேவாலயங்கள் இன்றும் அவர்களின் பெயர் சொல்ல பல தங்களின் மதம் சார்ந்த சேவைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படி இவர்களால் கட்டுவிக்கப்பட்ட ஒரு தேவாலயம் தான் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் தேவாலயம்.
யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கே15.4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. போர்த்துக்கேயரிடமிருந்து இலங்கையை கைப்பற்றிய ஒல்லாந்தர் அவர்களின் புரட்டஸ்தாந்து மொழியை இலங்கையில் பரப்ப பெரும் ஆர்வம் காட்டினர். அவர்களின் ஆசைக்கு ஏற்றதாய் அமைந்திருந்தது யாழ்ப்பாண நகரம்.யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க ஆலயங்களும், பாடசாலைகளும் பெருமளவில் காணப்பட்டதால் அந்த அமைப்புக்களை அப்படியே புரட்டஸ்தாந்துக் மதபிரச்சாரம் இடமாக மாற்றுவது ஒல்லாந்தருக்கு இலகுவான காரியமாக இருந்தது.
தங்களின் புரட்டஸ்தாந்து மதத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்று உறுதியான கொள்கையிலிருந்த ஒல்லாந்தர் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் எல்லாப் பகுதிகளிலும் புரட்டஸ்தாந்து மதம் ஆழமாக ஊடுருவச் செய்தார்கள். இக்காலத்தில் சங்கானைப் பிரதேசத்திலும் ஒல்லாந்தரின் புரட்டஸ்தாந்து மதம் செல்வாக்குப் பெற்றிருந்தது. சங்கானையில் ஒல்லாந்தர் மேற்கொண்ட புரட்டஸ்தாந்து மதப்பிரசாரத்தாலும், அம்மத ஊடுருவலாலும் தேவாலயம் ஒன்று தேவைப்பட்டதால் போர்த்துக் கீசரினால் அமைக்கப்பட்ட தேவாலயத்தை இவர்களின் தேவைக்கு பயன்படுத்திக்கொண்ட இடம் தான் சங்கானை தேவாலயம்.
இங்கு ஓர் ஆலயமும் செங்கல்லால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த ஒரு வீடும் அமையப்பெற்றுள்ளது. இந்த வீட்டில் அம்புறேசியா என்னும் போதகர் வசித்து வந்ததாகவும், இவர் புரட்டஸ்தாந்து சமயம் சார்ந்த பிரசாரங்களை செய்து வந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இவரின் போதனையை கேட்க வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
ஒல்லாந்தரால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாற்றங்களுள் கட்டடக் கலைகளும் இன்றுவரை பிரமிக்கத்தவகையில் உள்ளமை மறுக்க முடியாத நிதர்சனமாகும். இவர்களின் வியக்கதக்க கட்டக்கலைக்கு காரணம் ஒல்லாந்தரின் தாய்நாடு பெரும் பகுதி சதுப்பு நிலமாகவும், கடலாகவும் இருந்தமை. இயற்கையில் இருந்து தங்களை மீட்டு பாரிய கட்டிடங்களை அமைப்பதில் அவர்கள் பெற்றுக்கொண்ட தேர்ச்சிதான்.
சங்கானையில் இன்று காணப்படும் ஒல்லாந்தர் கால தேவாலயம் போர்த்துக்கேயரினால் அமைக்கப்பட்டிருந்த போதிலும் ஒல்லாந்தர் தமது ஆட்சியில் இத் தேவாலயத்தை புனரமைத்துக்கொண்டனர்.
1657 ஆம் ஆண்டு ஒல்லார்ந்து மதப் போதகர் ஒருவரின் நேரடிக்கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட்டது. இது முருகைக்கற்களினால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான தேவாலயம் ஆகும். குறிப்பாக உள் மண்டப கூரைப்பகுதி முற்று முழுதாக முருகைக்கற்களினால் கட்டப்பட்டிருக்கின்றது. இன்றுவரை இக்கூரையின் மேலிருந்து உள் மண்டபத்திற்குள் ஒரு துளியேனும் மழை நீர் உட்புகுந்ததில்லை என்பது முக்கிய அம்சமாகும்.
இலங்கையில் ஏனைய பகுதிகளில் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட தேவாலயங்கள் பல அழிவடைந்துள்ள நிலையில் அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அந்த வகையில் சங்கானையில் அமைக்கப்பட்ட தேவாலயமே இன்றும் ஓரளவிற்கு முழுமையான தோற்றம் கொண்டுள்ளமை எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த பொக்கிஷமாகும்.
ஏறக்குறைய இத்தேவாலயமானது 350 இற்கு மேற்பட்ட வருடங்களை கடந்த நிலையில் அண்ணளவாக ஐந்து பரப்புக் காணியில் அமைந்துள்ள இத் தேவாலயம் 4195 சென்றிமீற்றர் நீளமும் 1190 சென்றிமீற்றர் அகலமும் கொண்ட பரப்பில் அமையப்பெற்றுள்ளது. பதினொரு யன்னல் பகுதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தேவாலயத்தில் 9 யன்னல்கள் வெளிமண்டபத்திலும், 2 யன்னல்கள் உள் மண்டபப்பகுதியிலும் காணப்பட்ட போதிலும் இன்று இவை முற்றாக சேதமடைந்துள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும்.
தேவாலயத்தின் சுவர்கள் 30 சென்றிமீற்றர் நீளமும் 20 சென்றிமீற்றர் அகலமும் கொண்டதாக முருகைக்கற்களினால் இடையிடையே துண்டுகள் இடப்பட்டு கட்டுவிக்கப்பட்டுள்ளது. இன்றும் இச்சுவர்கள் கம்பீரமாக தோற்றம் தர இக் கட்டடிட நுட்பமே காரணம் எனலாம்.
இவ் தேவாலய சுவர் ஆங்காங்கே சிதைவடைந்து பராமரிக்கப்படாமல் காணப்படுகின்றமை கவலைக்குரியதே. இலங்கையில் ஒல்லாந்தரின் வரலாற்றுச் சின்னங்களை பல இடங்களில் காணப்பட்ட போதும் இவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரலாற்றுச் சின்னமாக சங்கானை தேவாலயமே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தேவாலயத்தை சிலர் ஒல்லாந்தர் கால கோட்டை எனவும் குறிப்பிட்டுள்ளனர். போர்த்துக்கேயர் அத் தேவாலயத்தை குதிரைகளைக்கட்டி வைக்கும் லயமாக பயன்படுத்தி உள்ளதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. எது எவ்வாறாயினும் அன்னியாரின்
கட்டடக்கலை மகத்துவத்திற்கு நல்லதோர் சான்று சங்கானை தேவாலயம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இந்த பொக்கிஷம் கட்டாயம் பேணிப்பாதுகாக்க வேண்டிய இடமும் கூட.
Comments
Post a Comment