வண்ணத்துப் பூச்சிகள் தரிசிக்கும் சிவனொளிபாதமலை

                      (Sri Pada / Adam's Peak)


இலங்கையில் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என நான்கு மதத்தவரும் ஒற்றுமையாக சென்று வழிப்படக்கூடிய ஒரு இடமாகத் திகழ்கிறது சிவனொளிபாதமலை .
உலகில் இன்றைக்கும் துலங்காத பல மர்மங்களை கொண்ட இம் மலை உச்சி சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ளது. மஸ்கெலியா பஸ் தரிப்பிடத்தில் இருந்து 18.8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை. ஏறக்குறைய 7359 அடி உயரம் கொண்ட கூம்பு வடிவாகசிவனொளிபாத மலையின் உச்சியில் 1.8 மீற்றர் நீளமான பாதம் ஒன்று உள்ளது.





இந்தப் பாதம் இந்துக்களைப் பொறுத்தவரை சிவபெருமானுடையது என்று நம்புகிறார்கள். அதனால், சிவனொளிபாத மலை என்று அழைக்கின்றார்கள். ஆனால், பௌத்தர்கள் அது புத்தரின் காலடித்தடம் எனக்கூறி ஸ்ரீ பாத என்று அழைக்கின்றனர். முஸ்லிம்கள், அதனை முதல் மனிதன் ஆதாமின் பாதம் என்று நம்புகின்றனர். இதனால் ஆதாமின் மலை என அவர்கள் இம்மலையை அழைக்கிறார்கள். இப்படி பல பெயர்களால் வேறுபட்டு இருக்கும் இம்மலை ஒற்றுமையின் ஓர் சின்னம் என்று சொல்வதில் இலங்கையர்களுக்கு பெருமை தான்.


சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் ஆரம்பிக்கும்
காலத்தில் மலையகம் எங்கு பார்த்தாலும் வண்ணத்துப்பூச்சிகள் அலை அலையாக பறந்து திரியும். இவை அனைத்தும் சிவனொளி பாதமலையை சென்று இறைவனை தரிசிப்பதாகவும் நம்பப்படுகின்றது.

இம்மாதம் பூரணைதினத்துடன் சிவனொளிபாத மலைக்கான பருவக்காலம் ஆரம்பிக்கவுள்ளதுடன், அடுத்தவருடம் பொசன் போயா தினம் வரை பருவகாலம் நீடிக்கும். வழமையாக இந்த புனித பூமி ஆறு மாதம் மக்கள் வழிபாடு செய்யும் இடமாகவும் அடுத்த ஆறு மாத காலம் காட்டுவிலங்குகள் வழிபாடு செய்கின்ற இடமாகவும் உள்ளதாக பழைமையான மக்களின் வாய்மொழி கதைகளின் மூலம் அறிய முடிகின்றது.

இப்பருவகாலம் ஆரம்பிக்கும்போது இரத்தினபுரி, காவத்தை சமன் தேவாலயத்தில் இருந்து விஷ்ணுவின் சிலை எடுத்துவரப்பட்டு சிவனொளிபாதமலை அடிவாரத்தில் உள்ள நல்லத்தண்ணி விகாரையில் வைக்கப்படும். பின்னர் நல்ல நேரத்தில் சிலை மலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு விகாரையில் பூஜிக்கப்படும்.

சிங்களவர்கள் விஷ்ணுவைத்தான் சமன் தேய்யோ என அழைப்பார்கள். இதனால் சிவனொளிபாதமலையை சூழ அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் சமன் அடவிய என இன்றும் சிங்களவர்களால் அழைக்கப்படுகின்றது.

சிவனொளிபாதமலைக்கு செல்ல இரத்தினபுரி, ஹட்டன்-நல்லத்தண்ணி என இருவழிகள் உள்ளன. எந்த வழியாக இருந்தாலும் மலை ஏற ஆரம்பிப்பதற்கு இரவு நேரமே உகந்தது. சொட்டும் பனித்துளிகள் உடம்பில் பட்டு மயிர்கள் சிலிர்க்க குளிர்க் காற்று வேகமாக வீச, மழை சொட்டு சொட்டாக பொழிந்து கொண்டிருக்கும் காலத்தில் மலை ஏறுவதுதான் சுவாரஷ்யம்.

இங்கு முதல் முறையாக தரிசனத்திற்கு செல்பவர்கள் கையில் வெள்ளைத் துணியில் நாணயம் ஒன்றை வைத்து காணிக்கை அணிந்து செல்ல வேண்டும் என்ற ஐதீகம் ஒன்று உள்ளது.
மலை ஏற ஆரம்பித்து சிறிது தூரம் சென்றதும் ஒரு அருவியுடன் புத்தர் சிலைகள் இருக்கும் இடத்தை அடைய முடியும். அந்த இடத்தில் கையில் கட்டியுள்ள காணிக்கையை கழற்றி வைத்துவிட்டு அந்த அருவியில் முகம், கை, கால்களை கழுவி இறைவனை தரிசித்து விட்டு செல்ல வேண்டும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
இப்படி தரிசனத்தை முடித்துவிட்டு மலை உச்சியை நோக்கி படிகள் வழியே நடந்து செல்லும் பாதையில் இருமருங்கிலும் விகாரைகள் கட்டப்பட்டுள்ளதுடன், அவசர தேவைகருதி வைத்திய முகாம்கள், முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மலை உச்சியை அடைவதற்கு முன்பு ஊசிமலை என்ற மலையைக் காணமுடியும். அந்த இடத்தில் ஊசியில் நூல் கோர்த்துக்கொண்டு அம் மலையின் ஆரம்ப இடத்தில் கட்டிவிட்டு நூலை கையில் எடுத்துக் கொண்டு மலை ஏற வேண்டும். கையில் உள்ள நூல் உடையாமல் இறுதி அந்தம் வரும்வரை மலை வழியே கொண்டு சென்று விட்டால் மனதில் எண்ணிய காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

இரவு மலை ஏற ஆரம்பித்தால் அதிகாலை மலை உச்சியை சென்றடைந்து இறைவனின் பாதங்களை தரிசித்துவிட்டு சூரியன் உதிக்கும் உன்னதமான காட்சியை பார்க்க முடியும்.
சிங்களவர்களின் சம்பிரதாயத்துக்கு அமைய மத்தளம் அடித்து முரசு கொட்டி சூரிய பகவானுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
இவ்வளவு காலம் சிவனொளிபாதமலை செல்லாதவர்கள் இம்முறையாவது சென்று இந்த இயற்கைகளை ரசித்துப் பாருங்கள்.

Comments