தமிழர்களுக்கே உரிய கலைச்சாயலுடன் மந்திரிமனை

(King Sangiliyan's Minister's House)


இலங்கையின் வடபகுதியில் தமிழரசர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பல அரிய நினைவுச்சின்னங்கள் இருக்கின்ற போதும் நல்லூர் சங்கிலியன் அரண்மனை ஒரு வரலாற்று பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். இது யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில் தமிழரசர் காலத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு கட்டிடமாகும். 
மந்திரிமனை என அழைக்கப்படும் சங்கிலியர் அரண்மனை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இன்றும் கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மந்திரிமனை போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்கு முன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடமாக  இருந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. 


அதனைச் சூழவுள்ள நிலமும், யாழ்ப்பாண அரசுக்கும் தொடர்பு இருந்திருக்கமுடியும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். 
அத்தோடு  சிறுவனாக இருந்த யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னன் சார்பில் அரசப் பிரதிநிதியாக இருந்த சங்கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுகின்றது. ஆனாலும், இக்கட்டிடத்தின் பெரும்பகுதி பிற்காலப்பகுதியில் சேர்க்கப்பட்டது என்பதே பல ஆய்வாளர்களது கருத்து.
மந்திரிமனையின் மத்திய பகுதி 15 ஆம் நூற்றாண்டளவில் பரணிருபசிங்கன் என்பவரால் கட்டப்பட்டது. அத்தோடு இம் 
மனையில் நிலவறைச் சுரங்கத்தின் நுழைவாயில்களும் காணப்படுகின்றது. இங்கு நிலவரைச் சுரங்கங்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டிடம், சுவர்கள் செங்கல், சுண்ணாம்புச்சாந்து, மரங்கள், ஓடுகள் என்பனவற்றை கொண்டு அமையப்பெற்றுள்ளது. மந்திரிமனையின் முன்புறத்தில் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகளைப்பார்த்து இது ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என யாழ்ப்பாண சரித்திரவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். 

ஆனாலும் இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடுகளுடனான மரத் தூண்கள், போதிகைகள் போன்றவை யாழ்ப்பாண அரசர் காலத்திற்குரியதாக கருதப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயரும் பின்னர் வந்த ஒல்லாந்தரும் தமது நிர்வாக தேவைகளுக்காக நல்லூரில் எஞ்சியிருந்த அரசகட்டிடங்களையும், நிலங்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே மந்திரிமனை என்றழைக்கப்படும் இக்கட்டிடம் மேலைத்தேயர்களினால் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடமாகவே இருந்திருக்கவேண்டும்.

சங்கிலித்தோப்பு
மந்திரிமனைக்கு எதிரே சங்கிலிய மன்னனின் அரண்மனை அமைந்திருக்கலாம் என நம்பப்படும் இடம் தான் சங்கிலித்தோப்பு. வரலாற்று முக்கியத்துவம் மிக்க குறியீடுகளாக இருப்பவை, 
சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிட வாயில் வளைவு. இது  யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான 
சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடத்தின் வாயிலாகும். 
அண்மைக் காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் இக் கட்டிடமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது ஓரளவு திருத்தப்பட்டுள்ளது.

யமுனா ஏரி
இது சங்கிலித்தோப்புக்குள் அமையப்பெற்ற பகர வடிவிலமைந்த ஒரு கேணி ஆகும். இக்கேணி சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் யாழ்ப்பாண வைபவமாலையின் படி இது 
சிங்கையாரியச்சக்கரவர்த்தி காலத்தில் கட்டப்பட்டது எனக் 
சொல்லப்படுகின்றது.

ஒல்லாந்தர் காலத்தில்  இக்கேணி பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான  சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் இன்றும் காண முடிகின்றது.

எப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் அதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட எஞ்சியுள்ள சில கட்டிடங்களில் இன்றும் வரலாற்றை எடுத்தியம்புகின்றன என்பது 
மட்டும் உண்மை. இவை காலத்தால் அழிந்துவிடாமல் அடுத்த 
சந்ததிகளும் பார்த்து பிரமிக்கச் செய்ய வேண்டியது உரிய 
அதிகாரிகளின் கடமையாகும்.

Comments