இலங்கை கட்டிட கலையின் பெருமை சொல்லும் பொலநறுவை வட்டதாகே

                                                  (Polonnaruwa Vatadage)


இலங்கை பௌத்த நாடு என்பதால் நம் நாட்டு பௌத்த விகாரைகள் பலவற்றின் சிறப்பு தொடர்பில் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்றாலும் இவ்விகாரைகளை பாதுகாப்பதற்காக அமையப்பெற்ற வட்டதாகேக்கள் பற்றி அதிகமானவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.



இந்தியக் கலை அம்சங்களின் செல்வாக்கு ஓரளவுக்குக் காணப்பட்ட போதிலும் இக் வட்டதாகேக்கள் பண்டைய இலங்கைக் கட்டிடக்கலைக்கு உரிய தனித்துவமான அமைப்பு என்பதை எவராலும் மறுக்க முடியாது.
புத்தரின் புனித சின்னங்களைத் தம்மகத்தே கொண்டு அமையப்பெற்ற தாதுகோபுரங்களைப் பாதுகாப்பதற்காக இவ் வட்டதாகேக்கள் ஆரம்பகாலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வெறும் பாதுகாப்பு மதில் என சொல்லி விட்டாலும் அவற்றில் உள்ள சிற்ப, செதுக்கல் வேலைப்பாடுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
இலங்கையில் தற்போது பத்து வட்டதாகேக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றை கட்டியவர்கள் யார், எந்த காலத்துக்குரியது என்பன இன்றுவரை அறியப்படாமலேயே இருக்கின்றது.
இலங்கையை பொறுத்தவரை தூபாராம தாதுகோபுரத்தைச் சுற்றி அமையப்பெற்றுள்ள வட்டதாகேயே மிகவும் பழைமையானது என்று கூறப்பட்டாலும் வட்டதாகே என்ற பெயருக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு பொலநறுவையில் உள்ள வட்டதாகே என்றால் அது மிகையாகாது.
பொலநறுவை நகரில் இருந்து 2.1 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த வட்டதாகே  பொலநறுவை இரசதானியின் இன்றியமையாத வரலாற்று சுவடு எனலாம்.
வட்டதாகேயின்  கட்டிட சிறப்பு
இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இவ் வட்டதாகேயின் முதல் பாதி 80 அடி  உயரமும்,24 அடி அகலமும் கொண்டுள்ள அதேவேளை இரண்டாம் பாகம் 120 அடி உயரமும் 37 அடி அகலமும் கொண்டுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் கூறுகின்றன.
பராக்கிரமபாகு மன்னனால் கட்டப்பட்ட இந்த வட்டதாகே பிற்காலத்தில் நிச்சங்கமல்ல மன்னனால் மறுசீரமைக்கப்பட்டது.
 பராக்கிரம பாகு மன்னன்  500 இற்கும் மேற்பட்ட காவலர்களை இந்த வட்டதாகே மண்டபத்திற்கு  காவலாக நியமித்திருந்ததாக வரலாறு கூறுகின்றது.
 அதேபோல நிச்சங்கமல்லன்  கிட்டத்தட்ட 1500 தொழிலாளர்களை கொண்டு இந்த மண்டபத்தை புனரமைத்ததாகவும், அதற்கு கூலியாக தொழிலாளர்களுக்கு  5 ஆயிரம் மூடை அரிசி தானமாக கொடுத்ததாகவும்  கூறப்படுகிறது.
மேலும் சசர என்ற இன பௌத்தர்கள் வட்டதாகேவை புத்தருக்கு நிகராக வைத்து வழிபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மகாவம்சத்தின் ஆசிரியரான செனரத் பரணவிதாரண இவ் வட்டதாகே கிட்டத்தட்ட தாமரை மலர்களை போன்ற தோற்றம் கொண்டது என தனது நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments